Tamilnadu

“போலிஸூக்கே பிரியாணி இல்லையா?”: ஓசியில் பிரியாணி கேட்டு கடை ஊழியரை தாக்கிய காவலர்- துணை ஆணையர் நடவடிக்கை!

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநாத் (55). இவர் பூந்தமல்லி போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஹரிநாத் வசிக்கும் வீட்டின் அருகே மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் பிரியாணி கடை நடத்தி வருகின்றனர்.

ஹரிநாத் அடிக்கடி அந்த பிரியாணி கடைக்குச் சென்று பணம் கொடுக்காமல் பிரியாணி வாங்கி செல்வதாகத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உதவி ஆய்வாளர் ஹரிநாத் அந்த பிரியாணி கடைக்கு சென்று ஓசியில் பிரியாணி கேட்டுள்ளார்.

அதற்கு கடை ஊழியர்கள் பிரியாணி விற்றுத் தீர்ந்துவிட்டது என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஹரிநாத் போலிஸூக்கே பிரியாணி இல்லை என்கிறாயா என கூறி ஊழியர்களை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் மதுரவாயல் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஹரிநாத்தை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஹரிநாத் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read: விசைத்தறி தொழில்களை சிதைக்கும் அதிமுக அரசு : நுால் விலை ஏற்றத்தைக் கண்டித்து விசைத்தறியாளர்கள் போராட்டம்!