Tamilnadu
மோடி அரசு கேஸ் சிலிண்டர் விலை ஏற்றத்தை திரும்ப பெறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் : கனிமொழி MP உறுதி!
மத்திய அரசு தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருவதை கண்டித்து, தி.மு.க மகளிரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய கனிமொழி எம்.பி, “தமிழகத்தில் உள்ள அரசு மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் விரோத திட்டங்களை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது இந்த எடப்பாடி அரசு. மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து முதலில் குரல் கொடுப்பது தி.மு.க மட்டுமே.
மத்திய அரசு தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, இரண்டு முறை ஆட்சிக்கு வந்தும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இதுவரை விவாதத்தில் கூட கொண்டுவரவில்லை. அதுமட்டுமல்லாது, 45 ஆண்டுகளில் இல்லாத நிலையாக மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து துறைகளிலும் முன்னேறிய காலகட்டத்தில் இருந்த தமிழகத்தை, இந்தப் பத்தாண்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதோடு, 50 ஆண்டுகள் பின் தங்கிய தமிழகமாக மாற்றியதுதான் இந்த எடப்பாடி அரசின் சாதனை.
மேலும், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிரச்சனைகளில் நாடு பொருளாதார வீழ்ச்சியில் உள்ள நிலையில், மக்களின் சுமையை குறைக்காமல் விலைவாசி உயர்வை ஏற்படுத்தி கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியிருக்கிறார் ஆளும் ஆட்சியாளர்கள்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரே மாதத்தில் 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்திய காரணத்தால், உணவு பொருள் விலை உயர்ந்துள்ளது. இப்படி விலையை உயர்த்திய மத்திய அரசை கேள்வி கேட்க திராணி இல்லாத, தைரியம் இல்லாத ஒரு அரசு தமிழகத்தில் உள்ளது.
மத்திய அரசை கேள்வி கேட்கும் திராணியும், தகுதியும் இருக்கும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். இதன் காரணமாகவே மக்கள் விரோத செயலில் ஈடுபடும் மத்திய அரசை கண்டித்து, முதலில் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தையும் அறிவித்தது தி.மு.க தான். இந்த விலை ஏற்றத்தை திரும்ப பெறும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!