Tamilnadu

NEET: உண்மைக்கு மாறாக பேசும் முதல்வர்.. திமுகவின் வெற்றியும்; அதிமுகவின் தோல்வியும்- கி.வீரமணி விளக்கம்!

தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதால்தான் ‘நீட்’ தொடர்வதாக தமிழக முதலமைச்சர் கூறி வருவதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:

‘நீட்’: தி.மு.க.வின் வெற்றியும் - அ.தி.மு.க.வின் தோல்வியும்!

உண்மைக்கு மாறாக முதலமைச்சர் பேசலாமா?

இந்தியா முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மருத்துவ படிப்பிற்கும், மருத்துவ மேற்படிப்புக்கும் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கும், பல் மருத்துவ மேற்படிப்புக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கடந்த 21.12.2010இல் இந்திய மருத்துவக் கழகம் (MCI) இரண்டு அறிவிக்கைகளையும், 31.05.2012இல் இந்திய பல் மருத்துவக் கழகம் (DCI) இரண்டு அறிவிக்கைகளையும் வெளியிட்டன.

இந்த அறிவிப்புகளை எதிர்த்து வேலூர், கிருத்துவ மருத்துவக் கல்லூரி (Christian Medical College (CMC)) உள்ளிட்ட பல மருத்துவக் கல்லூரிகளும், தமிழ்நாடு அரசு (தி.மு.க) உள்ளிட்ட பல மாநில அரசுகளும் பல வழக்குகளை தாக்கல் செய்தன.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரமஜித் சென் மற்றும் அனில் தவே ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றாக விசாரித்து கடந்த 18.07.2013 அன்று தீர்ப்பினை 203 பக்கங்களில் விரிவாக அளித்தது.

‘நீட்’ செல்லாது என்று தீர்ப்பு

நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் ஆகிய இருவரும் அரசமைப்புச் சட்டத்தின்படியும், 2002ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 11 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழுமையான அமர்வு (Full Bench) T.M.A. Pai Foundation Vs. State of Karnataka ((2002) 8 SCC 481) என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு அதனைப் பின்னிட்டு Islamic Academy of Education Vs. State of Karnataka ((2003) 6 SCC 697) வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு P.A. Inamdar Vs. State of Maharashtra (2005) 6 SCC 537)என்ற வழக்கில் அளித்த தீர்ப்பு மற்றும் Indian Medical Association Vs. Union of India ((2011) 7 SCC 179)ஆகிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையிலும், இந்திய அரசியல் சாசனம் 19, 25, 26, 29, 30 ஆகிய பிரிவுகளின் அடிப்படையிலும், ‘நீட்’ தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கழகம் மற்றும் இந்திய பல் மருத்துவக் கழகம் வெளியிட்ட நான்கு அறிவிக்கைகளையும் இரத்து செய்து ‘நீட்’ தேர்வு நடத்த அவைகளுக்கு அதிகாரமில்லை என்றும் ‘நீட்’ தேர்வு இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் தெளிவாக 176 பக்கங்களில் தீர்ப்பளித்தனர் (18.7.2013).

நீதிபதி அனில் தவே இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறி, தனது மாறுபட்ட (Dissenting) தீர்ப்பை அதே தீர்ப்பில் தொடர்ந்து 177 முதல் 203 வரையில் அதாவது 27 பக்கங்களில் மட்டுமே Dr.Preeti Srivastava and Another Vs. State of M.P. and Others (1999) 7 SCC 120 மற்றும் Veterinary Council of India Vs. India Council of Agricultural Research, (2000) 1 SCC 750 ஆகிய தீர்ப்புகளின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த MCI & DCI ஆகியவற்றிற்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளிக்கிறார். சட்டப்படி 2:1 என்ற அடிப்படையில் அனில் தவே அவர்களின் சிறுபான்மை மாறுபட்ட தீர்ப்பு செல்லாததாகி விட்டது. எனவே, ‘நீட்’ தேர்வு தடை செய்யப்பட்டது.

பின்னிட்டு 18.07.2013இல் வழங்கப்பட்ட மேற்படி Christian Medical College Vellore & Ors. Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305) வழக்கின் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவக் கழகம் உள்ளிட்ட சிலர் மறு ஆய்வு (Review Petitions) மனு தாக்கல் செய்கின்றனர். அந்த வழக்கு 2013இல் இருந்து வழக்கு தரப்பினர்களுக்கு அறிவிப்பு (Court Notice) அனுப்ப சார்பு செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வந்த நிலையில், நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் விக்ரமஜித் சென் ஆகிய இருவரும் ஓய்வு பெற்றுவிட்டனர்.

பா.ஜ.க மத்தியில் அதிகாரத்துக்கு வந்த பின்..

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய மருத்துவக் கழகம் ‘திறமையாக’ காய்களை நகர்த்தியது. எனவே, மேற்படி மறு ஆய்வு மனு இதனை ஒத்த வேறு ஒரு Civil Appeal No.4060/2009 என்ற ஒரு வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டி 21.01.2016 அன்று 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணை மாற்றப்படுகிறது. அந்த அமர்வுக்குத் தலைவர் மேற்படி Christian Medical College Vellore & Ors. Vs. Union of India & Ors. ((2014) 2 SCC 305) வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த சாட்சாத் அதே நீதிபதி அனில் தவே அவர்களேதான். மற்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஆதர்ஸ்குமார் கோயல், ஆர்.பானுமதி ஆகியோர். இந்தக் காலகட்டம் என்பது பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மறு ஆய்வு வழக்கில் வழக்கு தரப்பினர்கள் பலருக்கு நீதிமன்ற அறிவிப்பு (Notice) சார்வு ஆகாத நிலையில், இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் மூலமாக மாற்று முறையில் அறிவிப்பு செய்ய உத்தரவிடப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு, 15.02.2016 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு விசாரிக்கப்பட்டு 16.03.2016 அன்று இறுதி விசாரணைக்குப் பின்னர் 11.04.2016 அன்று ‘நீட்’ தேர்வு செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தி.மு.க அரசு வழக்குத் தாக்கல்!

‘நீட்’ அறிவிப்பு வந்த நிலையில், தி.மு.க அரசு வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிபதி ஜோதிமணி அவர்கள் மத்திய அரசின் ‘நீட்’ தேர்வுக்கு இடைக்காலத் தடையை விதித்தார். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தி.மு.க அரசு தன்னை இணைத்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உண்மை விவரங்கள் இவ்வாறு இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ‘நீட்’ தேர்வு தி.மு.க அங்கம் பெற்ற மத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது என்று குற்றம் சொல்வதை ஒரு வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அ.தி.மு.க அரசின் சட்டத்தின் கதி?

தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக (பா.ஜ.க.வைத் தவிர) ‘நீட்’டை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தி அழுத்தம் கொடுத்த நிலையில், அ.தி.மு.க. அரசு ‘நீட்’டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் இரு மசோதாக்களை - எதிர்க்கட்சிகளின் ஒப்புதலோடு ஒருமனதாக நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.

ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசின் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க. - அந்த உரிமையோடு, அழுத்தம் கொடுத்து அந்த இரு மசோதாக்களுக்குமான அனுமதியைப் பெறாதது ஏன்?

அ.தி.மு.க அரசு கோட்டைவிட்டது ஏன்?

மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவேண்டிய அவசியத்தின்போது, ‘நீட்’ ரத்து என்பதை நிபந்தனையாக வைத்திருக்க முடியுமே!

‘நீட்’ பிரச்சினை குறித்து இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே.ரெங்கராஜன் விளக்கம் கேட்ட கடிதத்துக்கு தமிழ்நாடு அரசிடமிருந்து எந்த மசோதாக்களும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவில்லை என்று பதில் வந்தது என்றால், அ.தி.மு.க அரசின் நடவடிக்கை மேலேயே அய்யப்பாடு ஏற்பட்டு விட்டதே!

பிறகு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற தகவல் - உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வந்தபோதுதான், மத்திய அரசின் வழக்குரைஞர் வெளிப்படுத்தியபோதுதான் தெரியவந்தது என்றால், இதில் அ.தி.மு.க அரசின் நம்பகத்தன்மை எத்தகைய கீழிறக்கம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

‘நீட்’டில் தி.மு.க - அ.தி.மு.க நிலைப்பாடுகள் என்ன?

‘நீட்’ எதிர்ப்பு என்பதில் தி.மு.க. அய்யத்திற்கு அப்பாற்பட்டு சமூகநீதியில் அதற்கிருக்கும் அழுத்தத்தின் காரணமாக உறுதியாகவே நடந்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க. அரசோ ஏனோதானோ என்ற போக்கில், அய்யத்திற்கு இடம் தரும் வகையில்தான் நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

தி.மு.க.வின் கொள்கையும், அ.தி.மு.க.வின் துரோகமும்!

தி.மு.க. அங்கம் வகித்த ஆட்சியின்போது ‘நீட்’ செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டது. அ.தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய பா.ஜ.க ஆட்சியில்தான் ‘நீட்’ வந்தது என்பதுதான் உண்மை.

எனவே, இதற்குமேலும் தி.மு.க அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்தான் ‘நீட்’ கொண்டு வரப்பட்டது என்ற உண்மைக்கு மாறான தகவலை ஒரு முதலமைச்சர் என்கிற தகுதியுள்ளவர் தொடர்ந்து கூறி வருவது அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுபோலவே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இயற்கைச் சீற்றங்கள் வந்தபோது எல்லாம் அ.தி.மு.க. அரசு கோரிய நிதியை மத்திய பா.ஜ.க அரசு கொடுக்கவே இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு - ‘இல்லை, இல்லை - மத்திய அரசு நாங்கள் கேட்டதைக் கொடுத்து வந்திருக்கிறது’ என்று சொல்லியுள்ளார் - இதாவது உண்மையா?

Also Read: “ஐ.ஐ.டி-களில் போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டம்” : கி.வீரமணி கண்டனம்!

உண்மையில் மத்திய அரசு எப்படி நடந்துகொண்டு இருக்கிறது?

2011-2012 இல் ‘தானே’ புயல் தாக்கியபோது தமிழகம் 5 ஆயிரத்து 249 கோடி கேட்டது. மத்திய பா.ஜ.க அரசு தானமாகப் போட்டதோ ரூ.500 கோடி.

2012-2013 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சிக்குத் தமிழகம் கேட்டது 9 ஆயிரத்து 988 கோடி ரூபாய்; ஆனால், மத்திய அரசு கொடுத்ததோ வெறும் 656 கோடி ரூபாய்தான்!

2015 ஆம் ஆண்டில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது; தமிழக அரசு 25 ஆயிரத்து 912 கோடி ரூபாய் கேட்டது; ஆனால், பா.ஜ.க அரசு தூக்கிப் போட்டதோ ஆயிரத்து 738 கோடி ரூபாய்தான்!

2016 ஆம் ஆண்டில் ‘வர்தா’ புயல் வந்தது. தமிழக அரசு 22 ஆயிரத்து 573 கோடி ரூபாய் கேட்டது. ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசு கொடுத்ததோ வெறும் 266 கோடி ரூபாய்தான்!

2017-2018 ஆம் ஆண்டில் ‘ஒக்கி’ புயலால் கடும் பாதிப்பு - கடலுக்குச் சென்ற மீனவர்கள் பிணமாயினர். அந்தச் சூழ்நிலையில் அ.தி.மு.க. அரசு கேட்ட தொகையோ 9 ஆயிரத்து 302 கோடி ரூபாய்தான். ஆனால், மத்திய பி.ஜே.பி. அரசு தூக்கிப் போட்டதோ வெறும் 133 கோடி ரூபாய்தான்.

2018-2019 ஆம் ஆண்டில் ‘கஜா’ புயல் வந்தது - டெல்டா மாவட்டத்தை உண்டு இல்லை என்று பதம் பார்த்தது. அ.தி.மு.க. அரசு கேட்டது ரூ.17 ஆயிரத்து 899 கோடி - கிடைத்ததோ ரூ.1145 கோடிதான்.

‘நீட்’ தேர்வானாலும், இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டாலும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாகவே தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழக அ.தி.மு.க அரசோ அவற்றை மூடி மறைக்கும் ஒரு வேலையில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. காரணம், வெளிப்படை!

மடியில் கனம்; எனவே, வழியில் பயம்!

தேர்தல் நெருங்க நெருங்க அ.தி.மு.க அரசின் இத்தகைய டெல்லி பா.ஜ.க ஆட்சிக்கு அடிமை சாசனம் எழுதித்தரும் ‘சேவகம்‘ எல்லாம் ‘பூதாகரமாக’ வெடிக்கும் என்பதில் அய்யமில்லை.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்தால்தான் மருத்துவ சீட்டா? கேள்விக்குறியாகும் அரசு பயிற்சி மையம்!