Tamilnadu
“மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 2 இடங்கள் உருவாக்க உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்” : ஐகோர்ட்டில் பதில்!
தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்று, கட்டணம் செலுத்த முடியாமல் உள்ள மாணவர்களுக்காக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா இரண்டு இடங்களை அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, மற்றும் இலக்கியா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என நவம்பர் 20ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கோரி மாணவிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, முதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனியார் கல்லூரிகளில் இடம் பெற்று கட்டணம் செலுத்த முடியாமல் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 60 மாணவர்களுக்கு மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தலா 2 இடங்களை அதிகரிப்பது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் இடம் உருவாக்க கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இடங்களில் 227 இடங்கள் மீண்டும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், அதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கிடைக்கும் 26 இடங்கள் கொண்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மனுதாரர் உள்ளிட்ட 60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த 60 மாணவர்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ள யாருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மீண்டும் நாளைய தேதிக்கு தள்ளி வைத்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!