Tamilnadu

“அரசை செயல்படுத்துவது மு.க.ஸ்டாலின்; எடப்பாடி பழனிசாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்” - செந்தில்பாலாஜி MLA சாடல்!

கரூர் மாவட்டம் கி்ருஷ்ணராயபுரம் தொகுதியில் ‘மக்களை நோக்கி ஸ்டாலினின் குரல்’ பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தி.மு.க விவசாய அணி மாநில செயலாளர் சின்னசாமி, செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ ஆகியோர் பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை சேகரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ பேசுகையில், “தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி செய்தபோது நீட்தேர்வை கொண்டுவந்ததாக தவறான தகவல்களை முதல்வர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது கொண்டு வரப்பட்ட சட்டம் எந்தெந்த மாநிலங்கள் நீட்தேர்வை விரும்புகிறதோ அந்த மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்பதுதான்.

ஆனால், நீட் தேர்வு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில்தான். நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்றது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான். ஏன் எடப்பாடி முதலமைச்சராக இருக்கும்போது நீட் தேர்வை அனுமதிக்கிறார்?

இந்த அரசாங்கத்தை நடத்த செயல் வடிவம் கொடுப்பது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான். எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்.

போக்குவரத்து துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறுவதில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. கொரோனா காலத்தில் ஆறு மாத காலம் வாகனங்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில், தகுதிச் சான்று பெறுவதற்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக வாகன உரிமையாளர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக நேற்று கரூரில் முதல்வர் பேட்டி அளிக்கையில், இங்கே ஒருத்தர் இடையூறாக உள்ளதாக கூறியுள்ளார். நீதிமன்றம் இருபத்தி இரண்டு மாதங்களுக்குள் புதிய பேருந்து நிலையத்தை அமைக்கவேண்டும் என உத்தரவிட்டும், நீதிமன்றம் உத்தரவிட்ட இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கின்றனர். காரணம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை திட்டமிட்டு ஊழல் செய்து வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை நியாயப்படுத்தும் வகையில் பேசிய முதல்வர் நிச்சயமாக விவசாயியாக இருக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

Also Read: தி.மு.க எம்.பி.க்களை அவமதித்த தலைமை செயலாளருக்கு பரிசா? - பதவிக்காலத்தை நீட்டிக்க எடப்பாடி அரசு திட்டம்!