Tamilnadu
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் முறைகேடு : தேர்தல் ஆணையம், கரூர் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
கரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி அத்தொகுதி வாக்காளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை எனக் கூறி, கரூர் தொகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், “கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதோடு ஆவண அடையாளங்கள் இல்லாத பலரின் பெயர்களும், இறந்தவர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபோன்ற குளறுபடிகளால் தேர்தல் நேர்மையாக நடக்குமா என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும், கரூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் கடந்த நவம்பர் 7ஆம் தேதியே தான் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை உடனடியாக ஆய்வு செய்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!