Tamilnadu
“வாடகை கொடுக்கக் கூட பணம் இல்லை” : தொடர்ந்து தொழில் நடத்த முடியாமல் சென்னையில் 2,000 ஓட்டல்கள் மூடல்!
கொரோனா தொற்றால் வேலையிழப்பு, வருமானம் குறைப்பு என மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே உழன்று வருகின்றனர். இதனால் பல்வேறு தொழில்களும் நலிவடைந்துள்ளன. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள் இன்று காலியாக உள்ளன.
அதிலும் குறிப்பாக ஓட்டல் தொழில் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ரயில், விமான சேவை இன்னும் முழுமையாக நடைபெறாத காரணத்தால் பொது மக்கள் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவது குறைந்துள்ளது.
இதன் காரணமாக ஓட்டல் தொழில்கள் கடுமையாக முடங்கியுள்ளன. சென்னையில் மட்டும் சிறிய, பெரிய ஓட்டல்கள், டீ, பேக்கரி கடைகள் என 10 ஆயிரத்திற்கும் மேல் செயல்பட்டன. பெரும்பாலான கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 6 மாதங்களாக ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தால், கட்டிட உரிமையாளர்களுக்கு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்வின் காரணமாக ஓட்டல்கள் செயல்பட்டாலும் வியாபாரம் இல்லாததால் இத்தொழிலை விட்டு பலர் வெளியேறி வருகின்றனர்.
வாடகை, குடிநீர் கட்டணம், மாநகராட்சி வரி உள்ளிட்ட பல்வேறு சுமைகளால் ஓட்டல் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் மூடிவிட்டனர். சென்னையில் சிறிய, பெரிய அளவிலான 2,000 ஓட்டல்கள் மூடப்பட்டு இருப்பதாக சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வசந்தபவன் ரவி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கொரோனா காலத்தில் கடை வாடகை குறைக்கப்படவில்லை. முழுமையாக கட்ட வேண்டும் என்று உரிமையாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அரசும் எந்தவித உதவியையும் செய்யவில்லை. இதனால் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலர் கடுமையான நெருக்கடியால் ஓட்டல்களை மூடியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!