Tamilnadu

“மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய மாநில அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” - தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி!

சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா. சுப்ரமணியன் எம்.எல்.ஏ, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலை வேலு ஆகியோர் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷை சந்தித்து, தொகுதி ஆய்வின்போது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அளித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ்கர், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோரையும் சந்தித்து மனுக்களை அளித்து உடனடியாக தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “மக்களை நேரடியாகச் சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற வேண்டும் என்று தி.மு.க தலைவர் அறிவுறுத்தியதன்படி, நாங்கள் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற்று முறையாக ஆணையரை சந்தித்து அளித்திருக்கிறோம்.

காலியாக இருக்கும் இடங்களில் எல்லாம் மேலும் மேலும் புதிதாக குடியிருப்புகள் கட்டுவதை தவிர்த்து, முதலில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துவிட்டு அந்த இடத்தில் சமுதாய நலக்கூடங்கள் கட்டி அவர்களுக்கு உதவும் வகையில் பணி மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்துள்ளோம்.

குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளில் அள்ளப்படாத குப்பைகள் குவிந்திருக்கின்றன. அவற்றை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள், நகரின் நடுவே, ரயில்வே நிலையத்துக்கு அருகில் உள்ளன. ஆய்வுக்கு சென்றபோது அருகருகே மூன்று டாஸ்மாக் கடைகள் இருப்பதால் பெண்மணிகள் வயதானவர்கள் அத்தனை பேரும் வந்து இவை அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

விதவை உதவித் தொகை வரவில்லை என்று செல்கின்ற இடமெல்லாம் தாய்மார்கள் என்னிடம் முறையிட்டார்கள். உடனடியாக கிடைக்கும் வகையில் ஆன்-லைன் மூலம் பெறப்படும் வசதி உள்ளதா என்பது குறித்து அவரிடம் கேட்டு பணம் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தோம்.

10 நாட்களுக்கு முன்பாக சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமாகினர். இருவருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தோம். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பதை உறுதியாக முன்வைத்தோம்.

அடிமை அ.தி.மு.க அரசு பொதுமக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் குலைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரும்போது, மழை வந்தாலே சென்னை முழுவதும் நீர்த்தேக்கமாக மாறிவிடுவதை தீர்க்க முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மக்களின் வரிப்பணம்தான் என்றும் அதை ரத்து செய்யவேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தும் பிரதமர் செவிசாய்க்கவில்லை. எங்களுடைய கைகள் இயலாமையால் கட்டப்பட்டிருக்கின்றன. மாநில அரசு தான் இந்த மக்களுடைய கண்ணீரைத் துடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அது தூங்கிக் கொண்டிருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.

Also Read: ரூ.312 கோடி உணவு எங்கே எப்போது வழங்கப்பட்டது? டெண்டர் விதி பின்பற்றப்பட்டதா? - திமுக MLA எழுப்பும் கேள்வி