Tamilnadu

“விவசாயிகளுக்கான போராட்டங்களில் காவல்துறை மூலம் வன்முறை ஏற்படுத்தும் எடப்பாடி அரசு?” : வலுக்கும் கண்டனம்!

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 21 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. மேலும் தொடர்ந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக தமிழகத்தில், மத்திய அரசு கொன்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மூன்றாவது நாளாக அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் பெரும்பாலான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக நடைபெறுகிறது.

இதில், திருப்பூரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி 3வது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய விவசாய கூட்டமைப்பினருடன் இணைந்து தி.மு.கவினர் மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதேபோல், திருச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் மூன்றாம் நாளாக தொடர்ந்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

கோவை, திருச்சி, மதுரை, கரூர், தென்காசி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் போலிஸாரின் தடைகளை மீறி காத்திருப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அமைதியான வழியில் போராடி வரும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில், அதிக அளவிலான காவல்துறையினரை அ.தி.மு.க அரசு குவித்து வருகிறது.

சில இடங்களில் நடைபெற்ற முற்றுகை போராட்டங்களில் போலிஸார் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் எடப்பாடி பழனிசாமி அரசின் இத்தகைய போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், “விவசாயிகள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் மோடியிடம் பதில் இல்லை என்பதால்தான் எதிர்க்கட்சிகள் மீது அவர் அபாண்ட குற்றச்சாட்டைக் கூறிவருகிறார்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளை உடனடியாக அழைத்துப் பேசி இந்த சட்டங்களை திரும்பப் பெற அரசு உடனடியாக முன்வர வேண்டும். விவசாய சட்டங்கள் மிக மோசமானவை என்பதால்தான் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று வரும் 18-ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் தி.மு.க தலைமையில் நடைபெறக்கூடிய ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது” எனத் தெரிவித்தார்.

Also Read: “இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 36 மீனவர்களை உடனடியாக மீட்கவேண்டும்” : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!