Tamilnadu
மக்கள் பயன்பாட்டிலுள்ள நடைபாதையில் பூங்கா அமைத்த கரூர் நகராட்சி... நீதிமன்ற ஆணையை மீறிய அ.தி.மு.க அரசு!
கரூர் மாவட்டத்தில் ரூ.118.53 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், கரூர் திருமாநிலையூர் அமராவதி ஆற்றின் இடையே 1924-ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு நூற்றாண்டை நோக்கி உள்ள பாலம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது, கரூர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பாலத்தை பொதுமக்கள் ஒரு வழிப்பாதையாக இரு சக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் பயன்படுத்தி வந்தனர். திடீரென்று இந்த பாலத்தின் தென்பகுதியை மூடிய நகராட்சி நிர்வாகம், கரூர் வைஸ்யா வங்கியின் உதவியோடு, பாலத்தில் நடைபாதை பூங்கா அமைக்கப்படுவதாக கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் பழமையான பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த குணசேகரன் என்ற வழக்கறிஞர் திருமாநிலையூர் பழைய பாலத்தில் நடைபாதை பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருமாநிலையூர் பழைய பாலத்தை போக்குவரத்து பயன்பாட்டிற்கு தவிர வேறு பயன்பாட்டிற்கு எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 23-02-2020-ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பூங்கா அமைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வரும் பாலத்தில்தான் பூங்கா அமைக்க வேண்டுமா எனக் கேள்வி எழுப்பினார். அப்போது, பதிலளித்த நாகராட்சி அதிகாரிகள், திருமாநிலையூர் அமராவதி பழைய பாலத்தில் நடைபாதை பூங்கா அமைக்கப்படவில்லை என பதில் அளித்துள்ளனர்.
மேலும் கடந்த 13-03-2020 ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கரூர் அமராவதி ஆற்றின் பழைய பாலத்தில் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கு மாநில அரசு ஏதேனும் அரசு ஆணை அல்லது ஒப்புதல் அளித்துள்ளதா? எனக் கேட்கப்பட்டதற்கு, கரூர் அமராவதி பழைய பாலத்தில் பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்படவில்லை என துறை ரீதியாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படவில்லை பதிலளித்து விட்டு தற்போது பூங்கா அமைத்துள்ளனர்.
மேலும், கே.வி.பி வங்கியின் நிதி உதவியுடன் நடைபாதை பூங்கா அமைக்கப்படுவதாக கூறி வந்த நகராட்சி நிர்வாகம், தற்போது அரசு நிதியில் இருந்து ரூ. 2 கோடியில் இந்த நடைபாதை பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்ச்சைக்குரிய நடைபாதை பூங்கா வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருமாநிலையூர் அமராவதி ஆற்றின் இடையே உள்ள பழைய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள நடை பாதை பூங்காவை திறந்து வைத்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பொது நல வழக்கு தொடுத்த வழக்கறிஞர் குணசேகரன் கூறுகையில், அமராவதி பாலத்தை நடைபாதை பூங்காவாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும், நீதிமன்றத்திற்கு எவ்வித முறையான பதிலளிக்காமல், தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வைத்து இந்த பாலத்தை திறந்து இருப்பது சட்டவிரோதமானது என்றார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விளக்கம் கேட்டு முறையீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!