Tamilnadu
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் மனைவி அனுசுயா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்களது மனைவி அனுசுயா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (15-12-2020) காலை மறைவெய்திய முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்களது மனைவி அனுசுயா அவர்களின் உடலுக்கு நேரில் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அத்துடன், திருமதி. அனுசுயாவின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், “முன்னாள் மத்திய அமைச்சரும் - அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களின் பாசமிகு மனைவி அனுசுயா அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களின் இல்லற வாழ்வின் ஒளிமிகு தீபமாக விளங்கியவர். அன்பிற்கும், பண்பிற்கும் மணிமகுடமாக விளங்கியவர். எப்போது அவரது இல்லத்திற்குச் சென்றாலும் முத்தமிழறிஞர் கலைஞர் மீதும் - என் மீதும், தனிப்பட்ட பாசமும் – அன்பும் காட்டி உபசரித்து நேசித்தவர். அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களின் வாழ்வின் அச்சாணியாகவும்- அரசியல் பயணத்திலும் மக்கள் சேவையிலும் உற்சாகமளிக்கும் மிகப்பெரும் உந்து சக்தியாகவும் திகழ்ந்தவர்.
அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு, அசைக்க முடியாத மலை போல் ஆதரவாக நின்று பொதுவாழ்விலும், கழகத்திலும் மகத்தான பணியாற்றத் துணை நின்றவர். அவரை இழந்திருப்பது அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத துயரம். எவ்வழியிலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! ஆறுதல் சொல்லவே என்னிடம் வார்த்தைகள் வர மறுக்கின்றன. அந்த அளவிற்கு அவரது மறைவில் நானும் சோகத்தில் மூழ்கியிருக்கிறேன்.
அனுசுயா அவர்களை இழந்து வாடும் அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் சொந்தங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!