Tamilnadu

“அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கலாமே?”- அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை!

பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையாகும் சூழல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ்  இம்மானுவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், தமிழகத்தில் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்கு ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன. ஆனால் மருத்துவம் மற்றும் பொறியியலைத் தவிர்த்து பிற உயர்படிப்புகளைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு அதுதொடர்பான வழிகாட்டல்களை வழங்க போதுமான வாய்ப்புகள் இல்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்து,  மேலாண்மை, சட்டம் என பல்வேறு துறைகள் உள்ளன. ஆகவே தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிறதுறை உயர்கல்வி தொடர்பான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்தும் அதற்கான பயிற்சி அளிப்பதற்கும் பயிற்சி மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அடங்கிய அமர்வு, “தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு பல துறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசின் வேலைவாய்ப்புகளுக்கே, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பது இல்லை. தமிழகத்தில் பள்ளியிலேயே மாணவர்கள் கஞ்சாவிற்கும் மதுவிற்கும் அடிமையாகும் சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது” என வேதனை தெரிவித்தனர்.

மேலும், ஒருகாலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இருந்த நிலையில், தற்போது பெரும்பாலானோர் விண்ணப்பிப்பது கூட இல்லை. அரசு மட்டுமல்ல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தலாம். வருங்கால தலைமுறையினர், வாய்ப்புகளை பயன்படுத்த அவர்களை உருவாக்கும் பணியிலும் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டும் என கருத்து தெரிவித்து இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “தி.மு.க தேர்தல் அறிக்கை காரணமாக அவசர அவசரமாக நிதி ஒதுக்கிய அ.தி.மு.க அரசு” - தி.மு.க MLA குற்றச்சாட்டு!