Tamilnadu
நீட் முறைகேடு: போட்டோ, சீரியல் எண்ணை மாற்றி மோசடி.. போலி சான்றிதழால் கலந்தாய்வின் போது சிக்கிய மாணவி.. !
நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே பெற்ற மாணவி , மற்றொரு மாணவியின் பெயரில் சான்றிதழ்களை தயாரித்து 610 மதிப்பெண்கள் பெற்றதாக சமர்ப்பித்துள்ளார். நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் உள்ள புகைப்படம் சீரியல் நம்பர் உள்ளிட்டவற்றை மாற்றி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேனி மருத்துவக் கல்லூரியில் படித்த உதித்சூர்யா என்ற மாணவன் நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விவகாரம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் மோசடியில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஏஜெண்டுகள் என கிட்டத்தட்ட 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்
இந்த நிலையில் சென்னையில் மாணவி ஒருவர் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து கலந்தாய்வில் கலந்து கொண்ட சம்பவம் மாணவ மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு கடந்த மாதம் 18ஆம் தேதியிலிருந்நு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி தீக்ஷா என்பவர் பங்கேற்றிருக்கிறார். அப்போது அவரது சான்றிதழ்களை சரி பார்த்த போது அவர் நீட் தேர்வில் 610 மதிப்பெண்கள் எடுத்து உள்ளதாக சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அவர் போலியான நீட் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்துள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். ஆனால் 610 எடுத்த ஹிர்த்திகா என்ற மாணவியின் பெயரில் உள்ள மதிப்பெண் பட்டியலை எடுத்து அதில் ஹிர்த்திகாவின் புகைப்படத்தை எடுத்துவிட்டு தீக்ஷாவின் புகைப்படத்தை ஒட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஹிர்த்திகாவின் மதிப்பெண் சான்றிதழில் உள்ள சீரியல் நம்பரை எடுத்துவிட்டு, தீக்ஷாவின் சீரியல் நம்பரை போட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் செல்வராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை பெரியமேடு போலீசார் மாணவி தீக்க்ஷா மற்றும் மாணவியின் தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் 420- ஏமாற்றுதல்,
ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல். தவறான ஆவணத்தை உருவாக்குதல். பொய்யான ஆவணத்தை பயன்படுத்துதல். ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்தல். பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என குறி பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் செல்வராஜன் அளித்துள்ள புகாரில் மாணவியின் தீக் ஷா வின் சான்றிதழ்கள் , மாணவி ஹிர்த்திகாவின் சான்றிதழ்கள் மற்றும் மற்றொரு மாணவியான மகாலட்சுமி என்ற மாணவி சான்றிதழ் ஆகியவற்றை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
வழக்கமாக நீட் தேர்வு எழுதி முடித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீட் ஆணையம் விதித்திருக்கிறது. அதாவது தேர்வு எழுதிய மாணவியின் பிறந்தநாள் விவரங்கள், அவருடைய சீரியல் எண் விவரங்கள், அவர் பயன்படுத்தக்கூடிய மொபைல் எண்கள், மற்றும் மொபைல் போனுக்கு வரக்கூடிய ரகசிய எண்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால்தான் ஒரு மாணவியின் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் சான்றிதழை எடுக்க முடியும்
இவ்வாறு இருக்கையில் எப்படி மற்றொரு மாணவி மதிப்பெண்ணை பட்டியலை எடுக்க முடிந்தது மேலும் இதுதொடர்பாக யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மருத்துவர் பாலச்சந்திரன் மற்றும் அவருடைய மகள் திக்ஷிதா ஆகிய இருவரையும் சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க பெரியமேடு போலீசார் திட்டமிட்டுள்ளனர்
இந்த மோசடி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டுள்ளனர் இது தொடர்பான புகாரை பெற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆணையர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!