Tamilnadu

S.P.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு: விசாரணை அறிக்கையை மனுதாரர்களுக்கு அரசு தராதது ஏன்? - ஐகோர்ட்

அமைச்சர் எஸ்.பி வேலுமணி சென்னை கோவை மாநகராட்சிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட கோரி அறப்போர் இயக்கம், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரில் ஆரம்பகட்ட முகாந்திரம் இல்லாததால் விசாரணையை கைவிட முடிவு செய்துள்ளதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறப்போர் இயக்கம் மற்றும் திமுக சார்பில், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை தங்களுக்கு தர வேண்டுமென்று கோரிய நிலையில் அது குறித்து பதிலளிக்க அரசு தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் வழக்கு நேற்று (டிச.,9) நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அமைச்சர் வேலுமணி எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு தருவதற்கு அவசியமில்லை என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் விசாரணை அறிக்கையை ஏன் வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு தரக்கூடாது என கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Also Read: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே ஊழலால் மாசுபட்டுள்ளது.. நீராதாரங்களை காப்பது அவசியம்” - ஐகோர்ட் மதுரை கிளை