Tamilnadu
“எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பதால் இடையூறு செய்யும் ஆளும்கட்சியினர், அதிகாரிகள்” - கீதாஜீவன் குற்றச்சாட்டு!
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்பதால் ஆளும்கட்சியினரும், மாநகராட்சி அதிகாரிகளும் பணி செய்யவிடாமல் இடையூறு செய்வதாக தூத்துக்குடி தி.மு.க எம்.எல்.ஏ கீதா ஜீவன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அறிந்தும், அறியாதது போல இருக்கிறார்கள். நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருப்பதால் நான் என்ன வேலை சொன்னாலும் மாநகராட்சி அதிகாரிகள் செய்வதில்லை.
குறிப்பாக மழைநீரை வெளியேற்ற மோட்டார் பம்ப், டேங்கர் லாரி போன்றவற்றை நான் கேட்டால் அனுப்புவதில்லை. இருப்பினும் நாங்கள் எங்களது சொந்த செலவில் 15 இடங்களில் மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். இன்னும் 10 மோட்டார் பம்புகள் ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகளிடம் வாங்கி வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு நாங்களே சொந்தமாக மோட்டார் பம்புகளை அமைத்து தண்ணீரை வெளியேற்றினாலும் ஆளும்கட்சியினர் இடையூறு செய்கிறார்கள். நாங்கள் இரவு, பகலாக பணியாற்றி மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஆனால், எங்களை பணி செய்யவிடாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இதற்கெல்லாம் நாங்கள் அசரமாட்டோம். தொடர்ந்து மக்கள் பணிகளைச் செய்வோம்.
அமைச்சர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் பிரதான சாலையில் மட்டும் பார்த்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். ஆனால், மக்கள் வசிக்கும் உள்புற பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்கிறது.
பல இடங்களில் மாநகராட்சி சார்பில் தண்ணீரை வெளியேற்ற வைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் முறையாக இயங்கவில்லை. பல பகுதிகளில் இன்னும் தண்ணீரை வெளியேற்றும் பணிகளையே மாநகராட்சி நிர்வாகம் தொடங்கவில்லை. இதற்கு மாநகராட்சி மற்றும் அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!