Tamilnadu
“வேளாண் சட்டங்கள் குறித்து என்னுடன் விவாதிக்கத் தயாரா?” - எடப்பாடி பழனிசாமிக்கு பி.ஆர்.பாண்டியன் சவால்!
பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கும் நிலையில் அதுகுறித்துத் தன்னோடு நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தை அடுத்தடுத்து தாக்கிய நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்ட விவசாய நிலங்களைப் பார்வையிட்டு வரும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால் வரலாறு காணாத மழைப்பொழிவைத் தமிழகம் சந்தித்துள்ளது. குறிப்பாக கடலூர் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரையிலும் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஓரிரு மாதங்கள் பெய்யவேண்டிய மழை ஓரிரு நாட்களில் கொட்டித் தீர்த்தது. இதனால் விளை நிலங்கள் முற்றிலும் நீரால் சூழப்பட்டன. சுமார் பதினைந்து நாட்கள் நீரில் மூழ்கி இருந்ததால் பயிர்கள் அழிந்து போய்விட்டன. இனி மறு உற்பத்திக்கு வாய்ப்பில்லை.
20 லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் நீரால் சூழப்பட்டு தற்போது ஓரிரு நாட்களாக வடியத் தொடங்கியிருக்கிறது. 6 லட்சம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் திருவாரூரில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இதுவரையிலும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 867 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லிவிட்டு முழுக் கணக்கெடுப்பு நடத்துவதாகத் தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
6 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில் 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கெடுப்புக்கு முன்னதாகவே இலக்கைச் சொல்லிக் கணக்கெடுப்பு செய்வது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இழப்பீடு தொகை குறித்து முதல்வர் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை என்றும் விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துபூர்வமான உத்தரவாதம் தரப்படும், பாதிக்கும் விஷயங்கள் குறித்து சில மாற்றங்களைச் செய்து சட்டத்தைக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவாகப் பேசுவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் உடனடியாக அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் இதுகுறித்து முதல்வரோடு நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.
எந்த இடத்திலும், பொது மேடையிலோ அல்லது அவரது அலுவலகத்தில் உயரதிகாரிகள் முன்னிலையிலோ, அல்லது அவர் விரும்புகிற ஊடகத்திலோ அவர் விவாதிக்கத் தயார் என்றால், நான் அவரோடு அமர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்தத் தயார்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?