Tamilnadu
“எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல வேடதாரி; பா.ஜ.க அரசுக்கு விவசாயிகளைப் பற்றிக் கவலை இல்லை”: மு.க.ஸ்டாலின்!
மோடி அரசின் வேளாண் விரோத கொள்கைகளை எதிர்த்து உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 10வது நாளாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், சட்டங்களுக்கு எதிராக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, சேலம் மாவட்டம் எருமபாளையத்தில், தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நடைபெறும் போராட்டத்தில் கருப்புக் கொடியேந்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும் அந்த போராட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான தி.மு.கவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.கவினர் கையில் கருப்புக்கொடியேந்தி, விவாசயிகளுக்கு எதிராக தூரோகம் செய்யும் மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் உரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க என்றென்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக துணை நிற்கும்; டெல்லியில் தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாயிகளின் பெரும் எழுச்சிப் போராட்டம் இதுவரை நடந்ததில்லை. இந்த போராட்டத்திற்கு மத்திய அரசே காரணம். மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசுக்கு விவசாயிகளைப் பற்றிக்கவலை இல்லை. மேலும் ஜனநாயகத்தையும் மத்திக்காமல் இந்த அரசாங்கம் செயல்படுகிறது. குறிப்பாக, பெரும்பான்மை உள்ளது என்ற ஒரே காரணத்துக்காக விவசாய விரோத சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.
பா.ஜ.க ஆட்சியை வழிநடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விளைநிலங்களைத் தாரை வார்க்க மோடி அரசு, விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. இதனால் நாட்டில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.
அதனால் தான், வேளாண் சட்டத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதும் கூட, மத்திய அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்கிறாரே, விழித்துக்கொள்ளவேண்டும் என எண்ணாமல் மோடி அரசு இருக்கிறது.
மக்களைக் காப்பாற்றக்கூடிய விவசாயிகளை மரணக்குழியில் தள்ளலாமா?, விவசாயிகள் போராடுவது ஏழைத்தாயின் மகன் எனக்கூறும் மோடிக்கு தெரியாதா?. மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக விவசாயிகள் போர் தொடுத்து வருகிறார்கள்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி கூறியிருந்தார். ஆனால், நாட்டில் ஆண்டுக்கு 10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களில் எங்காவது குறைந்தப்பட் ஆதார விலை என்ற வார்த்தை உள்ளதா?
ஒருபக்கம் மத்திய அரசு என்றால், மறுபக்கம் மாநில அரசு, தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி அரசு விவசாயிகளின் வாழ்வாதரத்தை சூறையாடும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து பச்சைத் தூரோகம் செய்திருக்கிறது. “நானும் ரவுடி தான்; நானும் ரவுடி தான்” என்பது போல், “நானும் விவசாயி தான்; நானும் விவசாயி தான்” என புலம்பிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் விவசாயி அல்ல வேடதாரி.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் விவசாயிகளுக்கும் பயனில்லை; மக்களுக்கும் பயனில்லை. அதனால்தான் விவசாயிகளையும், மண்ணையும் காக்க தி.மு.க களம் இறங்கியுள்ளது.
அதுமட்டுமல்லாது, டெல்லியில் உரிமைக்காக போராடும் விவசாயிகளை ’சேலத்து விஞ்ஞானி’ எடப்பாடி பழனிசாமி அபாண்டமாக கொச்சைப்படுத்துகிறார். விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கட்சியினர் தூண்டிவிடுவதாக முதல்வர் கூறுகிறார். எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுவதாக டெல்லி சென்று விவசாயிகளிடம் முதல்வர் பழனிசாமி கூறமுடியுமா?.
நேருக்கு நேர் விவாதிக்க ஆ.ராசா விடுத்த சவாலை ஏற்க எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா?, ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று ஆ.ராசா கேட்டு 3 நாளாகியும் முதல்வர் பழனிசாமி வாய் திறக்கவில்லை
அப்படி தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், ஆண்மை இருப்பது உண்மை, என்றால் ஆ.ராசாவிடம் தேதி குறியுங்கள்; வரத்தயார். அதுமட்டுமல்லாது, சேலத்தில் திமுக போராட்டத்துக்கு தொண்டர்கள் வரக்கூடாது என பல்வேறு முயற்சிகளை செய்தனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களை காவல்துறை மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு தடுத்துள்ளது. போராட்டத்துக்கு வந்தவர்கள் தடுத்து மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, தாரமங்கலம், கொளத்தூர் ஆகிய இடங்களில் 25,000 திமுக தொண்டர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ள தொண்டர்களை பார்த்த பிறகே சென்னை செல்வேன்” எனத் தெரிவித்தார்.
டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெறும் கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து #DMKwithFarmers என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ற
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!