Tamilnadu
அருந்ததியர்கள் ஊருக்குள் வர எதிர்ப்பு : ஊத்துக்கோட்டையில் முள்வேலி போட்டு சாலையை அடைத்த ஆதிக்க சாதியினர்!
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பேரண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லாம்பேட்டை சிற்றூராட்சியில், பல்வேறு வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதேபகுதியில், அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை அருந்ததியர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் உடல் நிலை சரியில்லாத காராணத்தால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று, திரும்பி வரும்போது அக்கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினர், அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், அவர்களது சாதிப்பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை ஊருக்குள் வரக்கூடாது; செருப்பு அணியக் கூடாது என மிரட்டி சாலையின் குறுக்கே முட்வேலியை போட்டு அடைத்துள்ளனர். இதனால் அருந்ததியின மக்கள் ஊருக்கு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டுனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண் ஒருவர் கூறுகையில், “ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியபோது, இவ்வழியாக நீங்கள் செல்லக் கூடாது என வழிமறித்து மர வேர்களை போட்டு சாலையை மறித்தனர். இதனால் முதியவரை தூக்கிக் கொண்டு செல்லும் அவநிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் நான்கு தலைமுறைகளாக எங்கள் மூதாதையர் இங்கு வசித்து, இந்த வழியை தான் பயன்படுத்தி வந்தனர். அப்போது, அப்பகுதியில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் எங்களுக்கு 6 அடி இடம் கொடுக்கப்பட்டதாக எங்களுடைய மூத்தோர்கள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாங்கள் இந்த வழியை பயன்படுத்தி வந்தோம். அப்படி இருக்கையில், இந்த சாலை அருகே உள்ள இரண்டு வீடுகள் சாலையை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாது, நாங்கள் நடந்து செல்ல மட்டுமே வழி விட்டது. இப்பொழுது இந்த வழியும் எங்களுடையது கிடையாது என்று சாலையை முழுவதுமாக மூடியுள்ளார்கள்.
இதனால் கடைவீதிக்கு கூட செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தீண்டாமைக் கடைபிடிக்கும் செயலால் மிகுந்த மனவேதனையில் உள்ளோம்” என வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு சாலை அமைத்தும், இந்தப் பிரச்சினையை முழுவதுமாக தீர்க்க உடனயான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் சமூக பாகுபாடு சென்னைக்கு அருகிலேயே மேலோங்கி நிற்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!