Tamilnadu

மனநல, உளவியல் குறித்த கல்வி நிறுவனங்களை அதிகரிக்காதது ஏன்?- மத்திய மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி!

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இந்திய மக்கட்தொகையில் ஏழு நபர்களில் ஒருவர், உளவியல், மனவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உண்மையா நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மதுரை சின்னச்சொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

சிறையில் உள்ள கைதிகள் பலர் தங்கள் முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொலை செய்து அந்த கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். கைதிகள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

சென்னை மன நல அமைப்பு மட்டுமே சிறைவாசிகளுக்கு மன நல சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி, மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தியாவில் நாளுக்கு நாள் மனவியல், உளவியல் பிரச்னைகளால் பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் சதவீதம் அதிகரித்துள்ளன. ஆரம்பத்திலேயே இதை நாம் கண்டறிந்தால், மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன எனத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் :

1) உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி இந்திய மக்கட்தொகையில் ஏழு நபர்களில் ஒருவர், உளவியல், மனவியல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது உண்மையா?

2) நம் மக்கட்தொகையில் மனம் மற்றும் உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் ஏதும் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனவா ? அவ்வாறு கள ஆய்வு மேற்கொண்டிருந்தால் கடைசியாக எப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது?

3) இந்திய மக்கட்தொகையில் அதிகமானோர் பாதிக்கப்படும் உளவியல் பிரச்சனை என்ன?

4) இந்தியாவில் போதுமான அளவு மனநல மருத்துவமனைகள் உள்ளனவா? ஏன் மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அல்லது மண்டல அளவிலும் மனநல மருத்துவமனைகளைத் தொடங்கவில்லை?

5) உளவியல் பிரச்னைகள் குறித்து கற்பிக்கும் கல்வி நிறுவனங்களை ஏன் அதிகரிக்கக்கூடாது?

6) மனநலம் தொடர்பான மத்திய அரசின் முதன்மையான நிறுவனமான NIMHANS பெங்களூரில் உள்ளது. இதே போல் இந்தியாவில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு ஆகிய மண்டலங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7) மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும், அது தொடர்பான மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளதா?

Also Read: ஊரடங்கு சமயத்தில் உண்டாகும் உறவுச் சிக்கலை சமாளிப்பது எப்படி? - மனநல மருத்துவர் ருத்ரன் ஆலோசனை! COVID19

8) இந்தியாவில் தேவைப்படும் மனநல உளவியல் மருத்துவர்கள் எத்தனை பேர் அதுதொடர்பாக தேவைப்படும் பணியாளர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் எத்தனை பேர்?

9) மக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஒவ்வொரு மாவட்ட அளவிலும் , தாலுகா அளவிலும் மனநல மருத்துவரை நியமிக்க என்ன நடவடிக்கை உள்ளது?

10) அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மனநலம் தொடர்பான பாடங்களை கற்பிக்க வெளிநாட்டு உளவியல் நிபுணர்களை பயன்படுத்த என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது?

12) மனநல 'மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகளின் நிலை என்ன? இதற்கு நிதி எவ்வளவு ஒதுக்கப்படுகிறது? மறுவாழ்வு மையங்கள் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு?

13) மனநலம் உளவியலில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காப்பீடு குறித்து அரசின் நிலை என்ன?

14 ) பள்ளிகளில் மனநலம் உளவியல் தொடர்பாக, மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மேம்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

என்பது குறித்து மத்திய , மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Also Read: “கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு மனநல நோய் தாக்கும்” : மருத்துவ ஆய்வறிக்கை எச்சரிக்கை!