Tamilnadu

நிவர் புயல் கடந்து சென்ற சுவடு மறைவதற்குள் இன்னொரு புயல்? - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வங்கக்கடலில் கடந்த நவம்பர் 24ம் தேதி உருவான நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி மீண்டும் புதிய புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, தென் தமிழகத்தின் மேற்குப்பகுதி நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. இந்தப் புயலையொட்டி புதுச்சேரி, கடலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 29ஆம் தேதியன்று தெற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைந்து தென் தமிழக பகுதிகளை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.