Tamilnadu

சேலம் சென்ற எடப்பாடிக்கு அரசு செலவில் ஆடம்பர வரவேற்பு.. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீறும் அ.தி.மு.கவினர்!

புயலால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் திருமண நிகழ்ச்சிக்காக 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலையில் ராட்சத மின் விளக்குகளை அமைத்து அ.தி.மு.கவினர் ஆடம்பர கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நிவர் புயலால் மக்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று இரவு சேலம் வருகிறார்.

குறிப்பாக மாநில கூட்டுறவு வங்கி தலைவரும், முதல்வரின் பினாமியான இளங்கோவன் இல்லத் திருமண விழா ஆத்தூர் அருகே நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு இரு புறமும், ராட்சத விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை கண்டுகொள்ளமால் இதுபோன்று விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான மின்சாரமும், அரசின் மின் கம்பத்தில் இருந்தே எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பல லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதே போன்று, சேலம் மாநகரம் மூன்று ரோடு அருகே, அ.தி.மு.க வர்த்தக அணி மாவட்ட தலைவர் ராமசந்திரன் மகன் திருமண விழா நடைபெறுவதையொட்டி அங்கு வரும் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் சாலையில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க கொடிகளை ஏற்றி வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை சற்றும் மதிக்காமலும், வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை மீறியும், சாலைகளில் பல இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

குறிப்பாக திருமண மண்டபத்தின் அருகே ராட்சத பேனர் வைக்கப்பட்டு இருப்பதால், அப்பகுதியில் சென்று வரும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் . அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதைத்தவிர சேலம் இரும்பாலைக்கு செல்லும் பிரதான சாலையிலும் அ.தி.மு.கவினர் சாலை முழுவதும் கொடிகளை கட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். நிவர் புயலால் மக்கள் பெருமளவு பாதிக்கபட்டுள்ள நிலையில், இது போன்று முதல்வரை வரவேற்க சிறிது நேர நிகழ்ச்சிக்காக ஆடம்பர செலவு செய்வது அவசியமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: “விளம்பர வெறிபிடித்த மோடி அரசு” : ஒரே ஆண்டில் விளம்பரங்களுக்காக ரூ.713 கோடி செலவு - RTI மூலம் அம்பலம்!