Tamilnadu
“நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களை கைவிடும் அ.தி.மு.க அரசு? ரூ.5,000 நிவாரணம் வழங்குக” : மு.க.ஸ்டாலின்
"இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) தனது அறிக்கையின் மூலமாக எச்சரித்தும் - 2015 பெருவெள்ளத்திலிருந்து அ.தி.மு.க. அரசு தேவையான பாடம் கற்றுக் கொள்ளவில்லை! மழை - வெள்ளம் - புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி ரொக்க நிவாரணமாக 5,000 ரூபாய் வழங்கிடுக!" என தமிழக அரசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவர்” புயலால் மழை பாதிப்பிற்குள்ளான கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், துறைமுகம், எழும்பூர் ஆகிய தொகுதிகளை நேற்றும், ராயபுரம், ஆர்.கே.நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை இன்றும் என, 11 சட்டமன்றத் தொகுதிகளில், உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கி, இரு தினங்களாக மக்களைச் சந்தித்துள்ளேன்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கும் போது, கடந்த கால புயல் மற்றும் டிசம்பர் 2015 பெருவெள்ளத்திலிருந்து எவ்வித பாடத்தையும் அ.தி.மு.க. அரசு கற்றுக் கொள்ள வில்லை என்று பொதுமக்கள் ஒரே குரலில் சொன்னதையும் கேட்க முடிந்தது.
மழைநீர் தேங்கி நிற்கும் பகுதிகளாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் இன்னும் இந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அதே நிலையில்தான் நீடிக்கிறது. குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதிகள் மட்டுமின்றி - தாழ்வான பகுதிகள்- முக்கியச் சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், “எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் மழை நீர் தேங்கவில்லை” என்று மலையளவு பொய்யை மனம் கூசாமல் முதலமைச்சரும் - அ.தி.மு.க அமைச்சர்களும் கூறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
“கணக்கு” காட்டுவதற்காகத் தூர்வாராமல் – மழைநீர்க் கால்வாய்களை ஒழுங்காகத் தூர் வாரியிருந்தால் கூட சாலைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்த்திருக்க முடியும். 2015 பெருவெள்ளத்தின் போது அ.தி.மு.க அரசின் தோல்விகள் பற்றி தனியாக சி.ஏ.ஜி. ஒரு அறிக்கையே கொடுத்தது. மார்ச் 2016-ல் அளித்த அறிக்கையை இரு ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டமன்றத்திலேயே வைக்காமல், ஒளித்து வைத்திருந்தது அ.தி.மு.க. அரசு. இறுதியில் நான் கேள்வி எழுப்பிய பிறகுதான், ஜூலை 2018-ல் இந்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் வைத்தது. பெருவெள்ளத்தைக் கையாளுவதில் அ.தி.மு.க. அரசுக்கு எப்போதும் அலட்சியம் - மெத்தனப் போக்கு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
அந்த அறிக்கையில் சொல்லப்பட்ட குறைகளை - எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை, இன்றளவும் அ.தி.மு.க. அரசு களையவுமில்லை; கடைப்பிடிக்கவுமில்லை; பெருவெள்ளத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் செவிமடுத்து, நடைமுறைப்படுத்தவில்லை.
சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையிலும் - மாநிலத்தின் நிதிநிலை அறிக்கையிலும் வெள்ளத் தடுப்பிற்காக - மழைநீர்க் கால்வாய்களுக்காக - மத்திய அரசின் நிதி உதவியின் கீழ் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டங்களுக்காக ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி என எதிலும் “கமிஷன்” அடிப்பது எப்படி என்பதில் மட்டுமே உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கவனம் செலுத்தினாரே தவிர, சென்னை மாநகரத்தைப் பற்றி அவர் துளிகூட கவலைப்படவில்லை. அதை முதலமைச்சர் பழனிசாமியும் எப்போதும் போல் கண்டு கொள்ளவில்லை.
ஊழல் கூட்டணியைத் தொடருவதற்காகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் - மாநகராட்சி ஆணையர்களை வைத்துக் கொண்டு அரசு நிதியைக் கொள்ளையடித்ததுதான் எடப்பாடி ஆட்சியின் “சாதனை”!
இப்போது நிவர் புயலால் பல மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கால்நடைகள் சேதம், வீடு இடிந்து விழுந்தது எல்லாம் ஆங்காங்கே நிகழ்ந்துள்ளது. அதிகாரபூர்வமாக மூன்று பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் படகுகள், விவசாயிகளின் விளைபயிர்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை என்றாலும் - பரவலாகப் புயல் பாதிப்பு, பல மாவட்டங்களிலும் இருக்கிறது.
குறிப்பாக, கடலூர் மாவட்டம் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இந்நிலையில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து - இழப்புக்குள்ளாகியுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக 5,000 ரூபாய் ரொக்கமாக வழங்கிட வேண்டும் என்றும், வீடு இழந்தவர்களுக்கு புது வீடு கட்டித்தருவதோடு - வேளாண் விளைபொருட்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இதுதவிர காவிரி டெல்டாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்யப்பட்டுள்ள விவசாயம் இன்னும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது. 'நிவர்' புயல் காரணமாக இரு தினங்களில் பதிவு செய்யுங்கள் என்று அரசுத் தரப்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட கெடுவை மறுபரிசீலனை செய்து - நவம்பர் 30-ஆம் தேதி வரை பயிர்க் காப்பீடு கட்டணம் செலுத்தலாம் என்று நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த காலங்களில் “கஜா புயல்” “2015 பெரு வெள்ளம்” போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கைவிட்டது போல், இந்த நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் கைவிடும் நோக்கில், அ.தி.மு.க. அரசு ஏனோதானோ என்ற முறையில் செயல்படக் கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்