File image
Tamilnadu

தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தாமாகவே வெளியேறிய மக்கள்!

நிவர் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை புறநகர்ப் பகுதியான தாம்பரத்தை அடுத்த முடிச்சூர், லஷ்மி நகர், வரதராஜபுரம், உள்ளிட்டபகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. தற்போது வரை மழை நீடித்து வருவதால் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி இருக்கும் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தப் பகுதிகளில் வடிகால் வசதி இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அவை தூர்வாரப்படவில்லை என்றும் அதனால் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கெடு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை மழைநீரை வெளியேற்றாததால் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பால் அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதால் குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் இடிந்த விழுந்ததால் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

இதுகுறித்து உடனடியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் குடியிருப்பு பகுதி மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Also Read: “நிவர் புயலால் உறங்க இடமின்றி தவிக்கும் சாலைவாசிகள்” : பாதுகாப்பு முகாம்களின் தங்க வைக்க கோரிக்கை!