Tamilnadu

சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை... பிரதான சாலைகள் மூடல்... ரயில், விமான சேவைகள் முடக்கம்! NivarCyclone

நிவர் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், முடிச்சூர், பெருங்களத்தூர், வரதராஜபுரம், மேற்கு தாம்பரம், பொழிச்சலூர், பம்மல், நந்திவரம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், அனகாபுத்தூர், திருமுடிவாக்கம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக சென்னையில் பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் மற்றும் விமான நிலையம் இன்று இரவு 7 மணியுடன் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் சென்னையிலிருந்து 214 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

மறுஅறிவிப்பு வரும் வரை சென்னையின் முக்கிய சாலைகள் மூடப்பட்டிருக்கும் எனவும், அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான முனையங்கள் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மெட்ரோ ரயில் சேவையும் இன்று இரவு 7 மணியுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ சேவை தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

Also Read: தாம்பரம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தாமாகவே வெளியேறிய மக்கள்!