Tamilnadu
ஊதிய உயர்வு கேட்டால் இருப்பதையும் குறைப்பதா? இன்னலில் உள்ள பொறியாளர்களுக்கு துரைமுருகன் கொடுத்த உறுதி!
ஊதிய உயர்வு கேட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை எடப்பாடி அரசாங்கம் குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கழகப் பொதுச்செயலாளரும் - முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “அரசு ஊழியர்கள் என்போர் அரசிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு பணியாற்றுவார்கள். சில நேரங்களில் அவர்கள், ஊதிய உயர்வு கேட்டு அரசுக்கு விண்ணப்பம் தருவார்கள். அரசு அலட்சியமாக இருந்தால், போராட்டம் நடத்துவார்கள். பிறகு, அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும். அதிலும், தீர்வு ஏற்படாவிட்டால், துறை அமைச்சர் முன்னிலையிலோ அல்லது முதல்வர் முன்னிலையிலோ பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதுண்டு.
சில நேரங்களில் தீர்வு காணாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவதும் உண்டு. இதுதான் நடைமுறையில் நான் பார்த்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் ஓர் விசித்திரம், எந்த ஆட்சியிலும் நடக்காத ஒரு அதிசயம் நடந்திருக்கிறது. அதிலும், முதல்வர் பொறுப்பேற்றிருக்கின்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில்; ஊதிய உயர்வு கேட்ட பொறியாளர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையே குறைத்து வழங்கிய ஆட்சி, நான் அறிந்தவரையில், இந்தியாவிலேயே அ.தி.மு.க. ஆட்சியாகத்தான் இருக்கும்.
ஊதிய உயர்வு தர முடியாவிட்டால், முடியவில்லை என்றுதான் சமாதானம் சொல்லுவார்களே தவிர, வாங்கிக் கொண்டிருக்கின்ற ஊதியத்தையா குறைப்பார்கள்? முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்த 2010ஆம் ஆண்டு, இந்தத் துறையைச் சார்ந்த பொறியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு, கோரிக்கை வைத்தார்கள். பொறியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஓர் முடிவு காண, ஒரு நபர் கமிஷனை முதலமைச்சர் கலைஞர் அமைத்தார். அந்த கமிஷனின் முடிவுப்படி, அடிப்படை ஊதியம் ரூ.15,600 மற்றும் கூடுதலாக தர, ஊதியம் ரூ.5,400 உதவி பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதைப் பார்த்த வேறு சில அரசு ஊழியர்களும், தங்களுக்கும் ஊதிய உயர்வு வேண்டுமென கேட்டபோது, ‘ஊதிய குறை தீர்வு குழு’ ஒன்றினை அமைத்தார். அந்தக் குழு உதவி பொறியாளர்களின் அடிப்படை ஊதியம் ரூ.15,600-லிருந்து ரூ.9,300-ஆகவும் தர ஊதியத்தை ரூ.5,100-ஆவும் குறைத்து வழங்கியது. இந்தக் குழுவின் முடிவினை எதிர்த்து, பொறியாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றார்கள். உச்ச நீதிமன்றமோ, நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு குழு அமைத்து தீர்வு காண அறிவுரை வழங்கியது. அந்தக் குழுவும் குறைதீர்வு குழுவின் முடிவையே அறிவித்தது.
குழுக்களின் முடிவு எப்படியோ இருக்கட்டும். பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் தன் துறையினருக்கு சற்று இரக்கம் காட்டியிருக்கலாம். “ஊழியர் ஊதியம் குறைத்த முதல்வர்” என்ற பட்டம் பெறாமல் இருந்திருக்கலாம். எப்படியோ, அன்றைய முதல்வர் கலைஞர் அளித்த ஊதிய உயர்வை அ.தி.மு.க. அரசு தட்டி பறித்துவிட்டது.
“தங்கப் பதுமை” திரைப்படத்தில் “கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி” என்று ஒரு பாட்டு. இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமன் அழகாகப் பாடியிருப்பார். ஆனால், இன்றோ., “கொடுக்காதவனே பறித்து கொண்டாண்டி” என்றுதான் பாட வேண்டியிருக்கு. முன்னாள் பொதுப்பணித் துறை - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற முறையில், இந்நாளில் இன்னலில் இருக்கும் பொறியாளர் நண்பர்களுக்கு ஓர் உறுதி. “கவலையை விடுங்கள். எங்கள் கலைஞரின் திருமகன் தளபதியின் தலைமையில் ஆட்சி உதயமானப் பின்னர், உங்கள் கோரிக்கையை என் தோளில் சுமந்து சென்று தீர்வு காண்பேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!