Tamilnadu

நிபந்தனைகளை திருத்தி ரூ.900 கோடிக்கு டெண்டர் விட்டு கஜானாவை கொள்ளையடிக்க அதிமுக திட்டம் - வைகோ கண்டனம்!

900 கோடி ரூபாய் ஊழல் டெண்டரை இரத்து செய்யக் கோரி மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வரும் அ.இ.அ.தி.மு.க., அரசு அந்திமக்காலத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதால் துறைகள்தோறும் ஊழல் கொடிகட்டிப் பறக்கிறது. அந்தப் பட்டியலில் இப்போது இன்னும் ஒரு ஊழலும் இணைந்து இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ‘அதிவிரைவாகச் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களைக் கண்காணிக்கும் கேமரா’ பொருத்துவதற்கு தமிழகப் போக்குவரத்துத் துறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரி அறிவிப்பு வெளியிட்டது. ஒப்பந்ததாரர்களின் ‘டெண்டர்’ பத்து முறைக்கு மேல் திறக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்தபோதே அது ஊழலுக்கு வைக்கப்பட்ட முதல் புள்ளியாகத் தெரிந்தது.

பின்னர் ஒருவழியாக 28.08.2019 அன்று செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்தும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்தப் புள்ளிகளைத் திறக்கும் முன்பு நடைபெறும் கூட்டத்தில் மொத்தம் 11 நிறுவனங்கள் பங்கேற்றன.

ஆனால், அதன் பிறகு டெண்டரை முறைப்படி திறக்காமல், ஒப்பந்த விதிமுறைகள், நிபந்தனைகளில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டது. இங்குதான் ஊழல் படலம் தொடங்கியது.

vaiko 

தேசிய நெடுஞ்சாலையில் கேமராக்கள் பொருத்தும் பணிக்கு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் முன் பணி அனுபவமாக 150 சிஸ்டம்கள் செய்த நிறுவனமாகவும், குறைந்தபட்சம் இதுபோன்ற இரண்டு திட்டப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் பெற்ற நிறுவனமாகவும் இருக்க வேண்டும் என்று இருந்ததை ‘30 சிஸ்டம்கள் அமைத்திருந்தால் போதும்’ என்றும், ‘ஒரேயொரு திட்டத்தை முடித்திருந்தால் போதும்’ என்றும் டெண்டர் நிபந்தனைகளைத் திருத்தியது ஏன்?

முதலில் இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் கண்காணிப்பு கேமரா பொருத்தும் 200 சிஸ்டம்களை அமைக்க வேண்டும் என்று அறிவித்து விட்டு பின்பு அதை ‘1000 சிஸ்டம்கள்’ என்று எண்ணிக்கை உயர்த்தப்பட்டது ஏன்? மேலும் 25 கோடி ரூபாய் என்று இருந்த டெண்டர் மதிப்பை 900 கோடி ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டது ஏன்?

ஆட்சியாளர்களுக்கு அல்லது துறைசார்ந்த அமைச்சருக்கு மிகவும் வேண்டிய நிறுவனத்திற்கு இந்த டெண்டரை அளித்து, அதன்மூலம் பயன் பெறுவதற்குத்தான் டெண்டர் விதிமுறைகள் திருத்தப்பட்டு, திட்ட மதிப்பீடும் உயர்த்தப்பட்டு உள்ளது என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

போக்குவரத்துத் துறையில் ஊழல் முறைகேட்டுக்கு வழிவகுக்கும் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் டெண்டரை உடனடியாக இரத்து செய்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும். அரசு கருவூலத்தைக் கொள்ளையடிக்கும் இதுபோன்ற ஊழல்களுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்க சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்க முனைவதா? பாஜக அரசின் பச்சை துரோகத்துக்கு வைகோ கடும் கண்டனம்!