Tamilnadu

“ரூ.20,000 மதிப்புள்ள கருவி ரூ.57,000க்கு கொள்முதல்” - எஸ்.பி.வேலுமணியை விளாசிய டி.ஆர்.பாலு எம்.பி!

சென்னை மாகராட்சிக்கு தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவிகளை வாங்குவதில் முறைகேடு நடந்திருப்பதால், டெண்டரை ரத்து செய்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெரு விளக்குகளைக் கண்காணிக்கும் கருவி ஒன்று சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும்போது அதே கருவியை சென்னை மாநகராட்சிக்கு 57 ஆயிரம் ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப்பணத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாழ்படுத்தியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கருவி வாங்குவதில் மட்டும் 20 கோடி ரூபாய்க்குப் பதில் 40 கோடி ரூபாயைச் செலவழித்துள்ள உள்ளாட்சித்துறை அமைச்சரும், சென்னை மாநகராட்சி கொள்முதல் அதிகாரிகளும் கூட்டணி சேர்ந்து அதிக விலையாகக் கொடுத்த 20 கோடியை சுருட்டியுள்ளார்களா என்ற நியாயமான கேள்வி எழுகிறது என்றும், இந்தக் கருவிகள் கொள்முதல் செய்யும் திட்டம் ஜெர்மன் வங்கி நிதியுதவித் திட்டம் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.

Also Read: “மக்களின் பாதுகாப்பு தொடர்பான பணிகளிலும் உறுத்தலே இல்லாமல் ஊழல் செய்யும் அரசு” - மு.க.ஸ்டாலின் தாக்கு!

20 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய “தெருவிளக்குகளைக் கண்காணிக்கும் கருவியை” 40 கோடி ரூபாய்க்குக் கொள்முதல் செய்யும் இந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் - இதுவரை பெறப்பட்ட கருவிகளைத் திருப்பிக் கொடுத்து- இந்த கொள்முதலுக்குக் காரணமான அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமியை, டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமும் ஒரு ஊழல் என்று அரசு பணத்தைக் கொள்ளையடிப்பதை எஞ்சியிருக்கின்ற மூன்று நான்கு மாதங்களுக்காவது நிறுத்திவைக்குமாறு அமைச்சர்களுக்கும் உத்தரவிட்டு - தானும் அந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சரை தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read: நிபந்தனைகளை திருத்தி ரூ.900 கோடிக்கு டெண்டர் விட்டு கஜானாவை கொள்ளையடிக்க அதிமுக திட்டம் - வைகோ கண்டனம்!