Tamilnadu
75 நாட்களில் 15,000 கி.மீ பயணம் : ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.க பரப்புரை!
2021ல் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழகம் தயாராகி வருகின்றது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு முன்னோடியாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தேர்தல் வியூகங்கள் அமைத்தல் மற்றும் தேர்தல் களப்பணிகளை தி.மு.கவினர் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிபதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு வருகின்றனர்.
அதேபோல், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழகம் மீட்போம்’ எனும் பெயரில் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் காணொளிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் நடக்கும் அவலங்களை அம்பலப்படுத்தி வருகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாகப் பேசும் கூட்டங்களிலேயே மக்களின் மேலான ஆதரவைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் தி.மு.க பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார் என தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும், “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் சுமார் 1,500 பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மேலும் இன்றிலிருந்து அடுத்த 75 நாட்களில் 15 ஆயிரம் கி.மீ பயணம் செய்து பிரச்சாரம் நடைபெறும். இந்த பிரச்சாரத்தில் 15 தலைவர்கள் அடுத்த 75 நாட்களில் 1,500 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
அதுமட்டுமின்றி, 500க்கும் மேற்பட்ட உள்ளூர் நிகழ்வுகள் மற்றும் 10,00,000க்கும் மேற்பட்ட நேரடி கலந்துரையாடல்கள் நடத்தப்படும். பிரச்சாரத்தின் முதல் நாளான இன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் துவங்கவிருக்கிறார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
இந்நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதற்கட்டமாக டெல்டா மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார். அதேபோல், ஜனவரி 5ம் தேதி காஞ்சிபுரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்குகிறார்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!