Tamilnadu
சென்னை தலைமை செயலகம் அருகே கஞ்சா விற்பனை : தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அறிவால் வெட்டு !
தமிழகத்தில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில், பல்வேறு பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போலிஸாரின் நடவடிக்கை காரணமாக பல இடங்களில், சோதனை செய்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்தாலும், விற்பனை குறைந்தபாடில்லை. கடந்த வாரத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போதை பொருட்கள் அதிக அளவில் பிடிபட்டுள்ளது.
மேலும், இந்த கஞ்சா போதையால் முன்பு இருந்ததை விட, படுமோசமான நிலைக்கு சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது. கஞ்சா விற்பனை பற்றி தட்டிக் கேட்பவர்கள், துப்புக் கொடுப்பவர்கள் மீதும் நடக்கும் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
கடந்த வாரத்தில் கூட, செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் கஞ்சா விற்பனை குறித்து போலிஸாரிடம் புகார் அளித்த முதியவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை தலைமை செயலகம் அருகே கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட பெண்ணுக்கு அறிவால் வெட்டு நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமை செயலகம் மற்றும் போர் நினைவு சின்னம் உள்ளிட்ட பகுதியில் ரவுடிகள் சிலர் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் பெண்கள் நடமாட முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், அன்னை சத்யா நகரை சேர்ந்த பெண்ணுரிமை இயக்கத்தை சேர்ந்த அன்னக்கிளி என்பவர் கஞ்சா விற்பனை செய்யும் ரவுடிகளை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரவுடிகள் அன்னக்கிளியை பட்டாக்கத்தியால் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டி காயப்படுத்தினர்.
மேலும், இதை தடுக்க முயன்ற அன்னக்கிளி தோழிகளான யசோதா, கற்பகம் ஆகியோரையும் தாக்கினர். படுகாயமடைந்த அன்னக்கிளி கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அன்னக்கிளி மற்றும் அவரது தோழிகளை தாக்கிய ரவுடிகளான சுந்தரம், சங்கர், தேவா ஆகிய 3 பேரையும் கைது செய்து பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர்.
முன்னதாக, சென்னை குன்றத்தூர் அருகே கஞ்சா விற்பனை பற்றி செய்தி வெளியிட்டதற்காக மோசஸ் என்ற செய்தியாளர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததான் விளைவாக தமிழகத்தில் கஞ்சா போதையில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க அரசு முன்வருமா?
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !