Tamilnadu
கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி!
ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைப் பகுதிகளில் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் ஜலால் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கொரோனா தொற்று காலத்தில் தமிழகத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போதுமான அளவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. மேலும் தென் தமிழகத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி இருந்தும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நோயாளிகள் மேற் சிகிச்சைகாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அரசு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் தனியார் ஆம்புலன்ஸுக்கு கட்டணம் செலுத்துகிறார்கள். மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தாலுகா மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதி இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய வசதி இல்லை.
மேலும் கிராமங்களில் இருந்து கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கால்நடை ஆம்புலன்ஸ் தமிழகத்தில் மிக குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் சேவை கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். எனவே தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும், இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும், மேலும் கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும் உயரதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். பெரும்பாலான ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் சில ஓட்டுநர்கள் இதுபோன்று செயல்படும் நிலை உள்ளது எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலை பகுதிகளில் வான்வழி ஆம்புலன்ஸ் வசதி உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தொடர்ந்து அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!