Tamilnadu

தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்தால்தான் மருத்துவ சீட்டா? கேள்விக்குறியாகும் அரசு பயிற்சி மையம்!

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. முதல் நாளான இன்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. அதற்காக 267 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் அவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து கொள்கின்றனர். இன்றைய இந்த கலந்தாய்வு பொறுத்தவரை முதல் 18 இடங்களைப் பிடித்தவர்களில் அனைவருமே இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையே நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மதிப்பெண் பெற்றவர்கள்.

அந்த அடிப்படையில் பார்க்கும் போது முதல் 18 இடங்களில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கும் இந்த மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பயிற்சி எடுத்து, அதிலும் தனியார் பயிற்சி மையத்தில் படித்து நீட் தேர்வு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கான போதிய நீட் தேர்வுக்கான பயிற்சி இல்லையா என்பது மாணவர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கின்றது.

தனியார் பயிற்சி மையத்தில் படித்தால் மட்டுமே அரசு பள்ளி மாணவர்களுக்கும் மருத்துவக்கனவு நனவாகும் என்ற இந்த சூழலில், அரசுப் பள்ளியில் நீட் தேர்வுக்கான பயிற்சி தரம் குறைந்துள்ளதா என மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read: “மருத்துவ கலந்தாய்வில் அ.தி.மு.க பேனர்கள்”: அரசு நிகழ்ச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் எடப்பாடி அரசு!