Tamilnadu
“அரசுப்பள்ளியில் முழுமையாக பயின்றவர்களுக்கே 7.5 % உள் இடஒதுக்கீடு செல்லும்” - ஐகோர்ட் கிளை திட்டவட்டம்!
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பள்ளி ஓடை கிராமத்தை சேர்ந்த மாணவி அரிவிக்கா சார்பாக அவரது தந்தை அறிவழகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பள்ளி ஓடை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தனது மகள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும் பயின்றார். பின்னர் குடும்ப வறுமை சூழல் காரணமாக எனது மனைவியின் கிராமத்தில் அரசுப் பள்ளி இல்லாத காரணத்தால் ஆறாம் வகுப்பு அரசு உதவிபெறும் பள்ளியில் சிலர் உதவி செய்து தன் மகள் இலவச கல்வி பயின்றுள்ளார்.
பின்னர், மீண்டும் சொந்த ஊரான கிராமத்திற்கு வந்து அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தன் மகள் பயின்றுள்ளார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடத்தையும் 11, 12ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எந்த தனியார் நீட் பயிற்சி மையமும் செல்லாமல் தன் மகள் அரசு பள்ளி ஆசிரியர்கள் துணையுடன் எழுதி 270 மதிப்பெண்களை எடுத்து உள்ளார். இந்நிலையில் அரசு அறிவித்துள்ள 7.5% உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டுமே மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால் மருத்துவ உள் இட ஒதுக்கீடு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முழுமையாக அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே என்று உள்ளது. ஆனால் குடும்ப வறுமையின் காரணமாக படிப்பை நிறுத்தக்கூடிய சூழலில் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் ஆறாம் வகுப்பு அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் எனது மகள் பயின்றுள்ளார்.
இதனால் தனது மகளுக்கு தற்போது மருத்துவ 7.5% உள் இட ஒதுக்கீடு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே தனது மகள் அரசு பள்ளியில் பயின்றதாக கருத்தில் கொண்டு தனது மகளை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் தனது மகளின் பெயரை இணைத்து ஒரு மருத்துவ பிரிவுக்கான இடத்தை ஒதுக்கீடு செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் மாணவி குடும்ப வறுமையின் காரணமாக ஆறாம் வகுப்பு மட்டுமே அரசு உதவி பெறும் பள்ளியில் சமூக ஆர்வலர்கள் உதவியால் படித்துள்ளார். மீண்டும் அரசு பள்ளியில் இணைந்து 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். எனவே இவருக்கும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும் என வாதிட்டனர்.
ஆனால் நீதிபதிகள் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசு பள்ளியில் முழுமையாக பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இந்த மாணவிக்கு உரிமை கோர முடியாது எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
Also Read
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !