Tamilnadu
தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் மோடி அரசு: காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ONGC ஒப்பந்தம்!
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை தொடங்குவதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு பலமான எதிர்ப்பு நிலவி வருகிறது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனாலும், ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மத்திய அரசும், அதற்கு ஏவல் புரியும் மாநில அரசும் மும்முரம் காட்டி வருகின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை பல சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன.
மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், தற்போது முதற்கட்டமாக, காவிரிப்படுகையில் 4,064 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மத்திய பெட்ரோலியம் துறையுடன் ஓ.என்.ஜி.சி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரன்பிரதான் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான தலைமை இயக்குநர் இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதன்படி காவிரி படுகையில், ஒஎன்ஜிசி-க்கு4,064 சதுர கிலோ மீட்டர் இடம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஏற்கனவே, காவிரிப்படுகையில் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது காவிரி கடலில் கலக்கும் கடல் பகுதியில் இந்த ஹைட்ரோகார்பன் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி-யுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஐந்தாவது ஏல ஒப்பந்தம் ஆகும்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நிறுவனங்களுக்கு ஏதும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக பெட்ரோலிய அமைச்சகத்திடம் தெரிவிக்க வேண்டும். தாமதப்படுத்தாமல் உடனடியாக பணியை தொடங்குவேண்டும்” என முன்பே கூறியுள்ளார்.
தமிழர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதில் வேகம் காட்டுவது, தங்களுக்கு வாக்களிக்காத தமிழக மக்களின் மீது விரோதத்தைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது என பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!