Tamilnadu

நாளை நாகை உட்பட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.. மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை!

குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

17.11.2020: குமரிக்கடல், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.11.2020: மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஆகவே மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் ஆழ்கடல் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.