Tamilnadu
“கல்வித் துறையில் காவிகளின் தலையீடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” : வைகோ ஆவேசம் !
சனாதன சக்திகளுக்கு அடிபணிந்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகத்தின் கருத்துக்கள் நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பிஏ ஆங்கிலம் மற்றும் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு முதல் காமன்வெல்த் இலக்கியங்கள் பாடமாக எழுத்தாளர் அருந்ததி ராய் நூலிலிருந்து சில பகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.
“வாக்கிங் வித் காம்ரேட்“ என்று எழுத்தாளர் அருந்ததி ராய் மத்திய இந்தியாவின் காடுகளிலுள்ள ஆயுதப் போராட்ட குழுவினரைச் சந்தித்த நிகழ்வுகளை விளக்கி பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதிய நூலாகும். இதிலிருந்துதான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெற செய்திருந்தனர்.
இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ்ஸின் மாணவர் பிரிவான அகில இந்திய வித்தியார்த்தி பரிசத் துணைவேந்தரிடம் கோரியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தை நீக்கிவிட்டு வேறு ஒரு பாடத்தை வைத்துள்ளனர்.
ஆங்கில இலக்கிய உலகின் தலைசிறந்த எழுத்தாளராக திகழும் அருந்ததி ராய் புக்கர் பரிசு பெற்றவர்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் ஓங்கி குரல் எழுப்பி வருபவர். இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் பாசிச இந்துத்துவ சனாதன சக்திகளுக்கு எதிராக துணிச்சலுடன் கருத்தியல் போரை நடத்தி வருபவர்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பட்டியலின மாணவர் ரோஹித் வெமுலா, ஏ பி வி பி அராஜகத்தால் தற்கொலை செய்து கொண்ட போதும், டெல்லியில் ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்எஸ்எஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட போதும், அருந்ததி ராய் வெகுண்டு எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒடுக்கப்பட்டோர் சிறுபான்மையினர் உரிமைகள் நசுக்கப்படுவதையும் நாடாளுமன்ற ஜனநாயகம் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்தியாவை பாசிசத்தின் கொடும் கரங்கள் வளைத்து உள்ளதை உலக நாடுகளின் கவனத்திற்கு தன்னுடைய கட்டுரைகள் மூலம் கொண்டு சென்றவர் என்பதால் அருந்ததிராய் மீது இந்துத்துவ கும்பல் எரிச்சல் உற்று இருக்கிறது.
சனாதன சக்திகளுக்கு அடிபணிந்து பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் புத்தகத்தின் கருத்துக்கள் நீக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் கல்வித் துறையில் காவிகளின் தலையீடு ஆபத்தான போக்கிற்கு வழிகோலும் வகையில் உருவாகி வருவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அரசு இது போன்ற சக்திகளை கண்டும் காணாதது போல் இருந்தால் தமிழக மக்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?