Tamilnadu
செல்வமுருகன் கஸ்டடி மரண வழக்கு : தமிழக அரசும் சி.பி.சி.ஐ.டி-யும் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் ஆணை!
நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியக் கோரிய, செல்வமுருகனின் மனைவி பிரேமாவின் வழக்கில் தமிழக அரசும் சி.பி.சி.ஐ.டி-யும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் திருட்டு வழக்கில் நெய்வேலி காவல் துறையினரால் விசாரணைக்கு அக்டோபர் 28ஆம் தேதி அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கைதாகி விருத்தாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நவம்பர் 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4ஆம் தேதி மரணமடைந்ததாக அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
நெய்வேலி காவல்துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால் தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாகவும், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி செல்வமுருகனின் மனைவி பிரேமா நவம்பர் 5ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மனு கொடுத்துள்ளார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால், நெய்வேலி காவல் ஆய்வாளர் ஆறுமுகம், நெய்வேலி டி.எஸ்.பி அலுவலக குற்றப்பிரில் உள்ள சுதாகர், அறிவழகன் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரும் புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி பிரேமா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். செல்வமுருகன் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்களை கொண்டு மறுபிரேதப்பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனு இன்று நீதிபதி ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேமா தரப்பில் வழக்கறிஞர் பி.குமரேசன் ஆஜராகி, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன் மரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டியுள்ளது அவசியம் என்றும், காவல்துறையினர் மீது வழக்கு பதிய வேண்டுமெனவும், மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் வாதிட்டார்.
தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றபட்டுவிட்டதாகவும், தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதலின்படி மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றதாகவும், அதை முழுமையாக வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த மரணம் போலிஸ் காவலில் நடைபெறவில்லை எனவும், அரசியல் நோக்கத்திற்காக கட்டுக்கதைகள் புனையப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி-யை எதிர்மனுதாரராக சேர்க்கும்படி மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதியக் கோரும் பிரேமாவின் மனு குறித்து தமிழக அரசும் சி.பி.சி.ஐ.டி-யும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!