Tamilnadu
வங்கி கடன் கேட்டு அதிகாரிகள் மிரட்டல் : நான்கு மாற்றுத்திறனாளிகளுடன் வாழ வழியின்றி தவிக்கும் தொழிலாளி!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே மேக்கோடு கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ஸ்ரீகுமர். இவரது மனைவி மாற்றுத்திறனாளி சிந்து கலா. இவருக்கு ஒரு ஆண் மகன் சிவ பிரசாத், மற்றும் இரண்டு பெண் மகள்கள் என மூன்று பிள்ளைகளும் பிறவியிலே மாற்றுத்திறனாளிகள்.
கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் வசித்து வந்த குடிசை வீடு கனமழையில் முற்றிலும் சேதமடைந்தது. இவர் ஆதரவற்ற நிலையில், ஒரு சிறு வீடுகட்ட பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை நாடி வங்கிகள், அரசு அலுவலகங்கள் தோறும் பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் எந்த வங்கிகளும் லோன் வழங்கவோ, அதிகாரிகள் நலத்திட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை.
வேறு வழி இன்றி கடந்த 2016ம் ஆண்டு இவருக்கு சொந்தமான 3 சென்று நிலத்தை களியக்காவிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வைத்து 6 லட்சத்தி 35 ஆயிரத்தி 400 ரூபாய் வீட்டு கடன் பெற்று சிறுதாக ஒரு வீடு கட்டி வசித்து வந்தார். கூலி தொழிலில் கிடைத்த வருமானத்தை வைத்து மனைவி மற்றும் மூன்று மாற்றுத்திறனாளி பிள்ளைகள் என நான்கு பேரையும் காப்பாற்றி வந்தார்.
ஸ்ரீகுமர் மனைவிக்கு திடீரென முதுகெலும்பில் ஏற்பட்ட நோய்க்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அறுவை சிகிச்சை நடந்ததை தொடர்ந்து தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு பல லட்சம் ரூபாய் ஆன நிலையில், ஸ்ரீகுமர் வங்கியில் கடன் கட்ட முடியாத நிலை உருவானது.
மேலும் இரண்டு மகள்களும் நாகர்கோவிலில் ITI படித்து வருகின்றனர். இவர்களுக்கும், மகனுக்கும் கல்வி செலவும் ஸ்ரீகுமார் பலசரக்கு கடையில் கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானத்தில் மட்டுமே பார்க்க வேண்டியதால் சுமையும் வறுமையும் அதிகரித்து கொண்டே போனது.
இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக கொரானா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் போனதால் தனது வாழ்க்கை நடத்த முடியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் வங்கி அதிகாரிகள் கட்ட முடியாத கடன் நிலுவை தொகையை மொத்தமாக கட்ட வேண்டும் என்று மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் நான்கு மாற்றுத்திறனாளிகள் உட்பட ஐந்து பேரின் பசியை போக்கவே வழி இல்லாமல் தவிக்கும் ஸ்ரீகுமருக்கு வங்கியில் லோன் கட்ட முடியவில்லை.
தற்போது, வங்கியின் களியக்காவிளை கிளை மேலாளர் மற்றும் அதிகாரிகள் ஸ்ரீகுமரின் வீட்டிற்கு சென்று கடன் மற்றும் வட்டியுடன் 6 லட்சத்து 59 ஆயிரத்து 500 ரூபாய் வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என தெரிவித்தனர். மேலும் வீட்டை ஏலம் விட போவதாக வீட்டு சுவரில் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.
இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் இந்த குடும்பம் கண்ணீர் விட்டு அழுகின்றனர். கடன் அடைக்க கால அவகாசம் தரவோ அல்லது நான்கு மாற்றுத்திறனாளிகளிடம் அரசு கனிவு கூர்ந்து இந்த கடன் தொகையை தள்ளுபடி செய்யவோ முன்வர வேண்டும். இல்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்வது மட்டுமே தனக்கு ஒரே வழி என்று ஸ்ரீகுமார் கண்ணீர் விட்டு கதறி வருகிறார்.
பல லட்சம் , பல கோடிகள் வங்கி கடன் பெற்று கட்டாமல் இருக்கும் பலர் மீது இது போன்ற வங்கிகள் கண்டு கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நான்கு மாற்றுத்திறனாளிகளை காபற்ற வழி இன்றி வறுமையில், தவிக்கும் கூலி தொழிலாளி ஸ்ரீகுமாரின், இந்த ஏழை குடும்பத்துக்கு கடன் தள்ளுபடி செய்து, தற்கொலை முயற்சியில் இருந்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியரும், இந்த செய்தி கவனத்தில் கொண்டு தமிழக முதல்வரும் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு என பல்வேறு அரசு சலுகைகள், திட்டங்கள் மற்றும் கொரோணா காலத்தில் இது போன்ற கடன்களுக்கு மத்திய மாநில அரசுகள் சலுகைகள் காலகடு அறிவித்துள்ள நிலையில், வங்கி அதிகாரிகளின் இது போன்ற கருணையற்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்த நான்கு மாற்றுத்திறனாளிகளுடன் வாழ வழி இன்றி தவிக்கும் ஸ்ரீகுமருக்கு உதவிக்கரம் நீட்ட அரசு முன் வருமா...?
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!