Tamilnadu

“தீபாவளி பண்டு சீட்டுக்காக வாங்கி வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்து தீ விபத்து” : 2 பேர் உடல் கருகி பலி!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பெருமாள்மலை என்னும் பகுதியில், பழனிச்சாமி என்பவரின் வீட்டில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர் குடியேறினர். இக்குடும்பத்தில் ஒரு தாயார் மற்றும் மூன்று மகன்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தாயாரும் கடைசி மகனும் தனியாக குமாரபாளையம் பகுதியில் குடியேற, மூத்த மகன் ரங்கராஜன் மற்றும் இளைய மகன் ஆகியோர் மட்டும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது ரங்கராஜன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி பண்டு சீட்டுக்காக, பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய பட்டாசு பெட்டிகள் வாங்கி இறக்கி வைத்துள்ளனர்.

இதனிடையே, நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டில், ராஜாவும் அவரது நண்பரும் பட்டாசு பெட்டிகளை அடுக்கி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதன் காரணமாக, வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது.

அப்போது, அருகில் இருந்த இரண்டு வீடுகள் உட்பட மூன்று வீடுகள் இடிந்து சேதமாகின. ராஜாவும் அடையாளம் தெரியாத அவரது நண்பரும் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த, தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அனைத்து, எரிந்த நிலையில் இருந்து இரண்டு சடலங்களை மீட்டு, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பள்ளிபாளையம் போலிஸார், வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் எவ்வாறு வெடித்தது என்றும் ராஜாவுடன் உயிரிழந்த மற்றொரு நபர் யார் என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பக்கத்து வீட்டில் குடியிருந்த இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாவளி நாட்களில் உரிய அனுமதியின்றி அதிக அளவிலான வெடிப் பொருட்களை வீட்டில் வைக்க அரசு தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: கரூரில் பட்டப்பகலில் 16 வயது சிறுவன் கடத்தல் : வட மாநில கும்பல் மீது சந்தேகம் என பெற்றோர் குற்றச்சாட்டு!