Tamilnadu

“எடப்பாடி அரசின் நிர்வாகம் கேடுகெட்டுப் போயிருப்பதற்கு இதுவே உதாரணம்”-தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 58 ஆம் ஆண்டு குரு பூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தி.மு.க சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் 113-வது பிறந்தநாள் விழா - 58-வது குருபூஜை. தேசியத்தை தன்னுடைய உடலாகவும், தெய்வீகத்தை தன்னுடைய உயிராகவும் கருதி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் தேவர் திருமகனார் அவர்கள்.

பிறந்தநாள் அன்றே அவருடைய நினைவு நாளும் அமைந்திருக்கிறது. இது பெரிய அதிசயம் - அபூர்வம். அப்படிப்பட்ட அதிசய - அபூர்வ சக்தி படைத்த மனிதராக வாழ்ந்தவர் தேவர் திருமகனார் அவர்கள். விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டின் நலன் கருதி ஏழை எளியவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், குறிப்பாக, விவசாயிகளின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் தேவர் திருமகனார் அவர்கள்.

அவருடைய பிறந்தநாளும், குருபூஜையும் நடைபெறும் இந்த நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை நாங்கள் அவருக்குச் செலுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், உள் இடஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதால் நாங்கள் செய்யவில்லை. மக்களும் போராடவில்லை; நாங்களாகவே அரசாணை வெளியிட்டோம் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். அதுகுறித்து உங்களது கருத்து என்ன என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தி.மு.க தலைவர், “எடப்பாடி தலைமையிலான நிர்வாகம் எந்த அளவிற்கு மோசமாக கேடுகெட்டுப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே ஓர் உதாரணம். இதை மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பே இந்தச் சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதற்குப் பிறகு, அதற்குரிய அழுத்தத்தையாவது கொடுத்திருக்க வேண்டும்.

இதைக் கண்டித்துத்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் போராட்டத்தை நடத்தி மக்களுக்கு எடுத்துச் சொன்னோம் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி சொன்னார். நான் முன்பே இதற்குப் பதில் சொல்லியிருக்கிறேன். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் அரசியல் செய்யாமல் அவியலா செய்து கொண்டிருக்கும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். அதுதான் இன்றைக்கும் நான் சொல்லக்கூடிய பதில்.

இப்போது இந்த அரசாணை வெளியிட்டிருப்பதை நேற்று நான் வரவேற்று இருக்கிறேன். ஆனால் அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்த அரசாணை உடனடியாக - இனிமேலாவது காலம் தாழ்த்தாமல் கவுன்சிலிங் முறையை விரைவுபடுத்தி, இந்த ஆண்டே அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டு விதமான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றது. இந்த அரசாணை சட்டரீதியாகச் செல்லுமா - செல்லாதா? யாராவது நீதிமன்றத்திற்குச் சென்றால் இந்த அரசாணை நிற்குமா - நிற்காதா? என்ற ஒரு நிலை இருந்து வருகிறது. எனவே இதையெல்லாம் பரிசீலித்து அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 7.5 சதவீதம் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தேவர் பெருமகனார் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” : மு.க.ஸ்டாலின் அறிக்கை!