Tamilnadu
“7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கூடுதல் அவகாசம் கேட்பது வேடிக்கை” : ஐகோர்ட் கிளை
7.5% உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து ஆளுநர் மனசாட்சியுடன் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது குறித்து கவர்னர் மனசாட்சியுடன் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி மதுரையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கூறுகையில், “7.5% உள் ஒதுக்கீடு மசோதாவில், தமிழக ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்கவேண்டும். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், விரைவாக முடிவெடுக்க வேண்டும். சூழல், அவசியம், அவசரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே, சட்டசபையில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கூடுதலாக பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் கால அவகாசம் தேவையா?
மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கூடுதல் அவகாசம் கேட்பது விசித்தரமாக உள்ளது. இதுபோன்ற சூழல்கள் ஏற்படாது என்பதாலேயே, ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என சட்டத்தில் உள்ளது. ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனினும், மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது என்று மனுதாரர் தரப்பு தெரிவித்ததை அடுத்து, இதனை உறுதி செய்து தகவல் தெரிவிக்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
பிற்பகலில் விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது :
நீதிபதி கலையரசன் ஆய்வறிக்கையில் அரசு மாணவர்கள் வேலை செய்துகொண்டே படித்து வருகின்றனர் என்பது தெரியவருகிறது. இதனை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உள் ஒதுக்கீடு தொடர்பாக தவறான கருத்துகளை வெளியிடுபவர்களுக்கு உண்மை நிலை புரியும். அரசியல் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி தேச நலனுக்கு எதிராகச் செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
2 மாதங்களுக்கு முன்பே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, அக்டோபர் 16ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி தற்போது வரை கலந்தாய்வு நடைபெறாமல் உள்ளது. 2017 முதல் 2020 வரை மொத்தமாக 14 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த வருடம் நீட் தேர்வில் 400 முதல் 500 மாணவர்கள் இந்த வருடம் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் உள்ஒதுக்கீடு இந்த வருடமே அமல்படுத்தப்பட்டால் 200 முதல் 300 மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது.
சட்ட விதி 361-ன் படி ஆளுநருக்கு உத்தரவிடவோ, கேள்வி எழுப்பவோ நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஆனால் சட்ட விதி 200-ன் படி ஏழை மாணவர்களின் மருத்துவப் படிப்பின் கனவை மனதில்கொண்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
அரசமைப்பு பொறுப்பில் உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு பதில் அளிக்கும் அளவிற்கு நடந்துகொள்ள மாட்டார்கள் என்னும் நம்பிக்கை காரணமாகவே இதுபோல் விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா குறித்து திங்கட்கிழமை நல்ல முடிவு எட்டப்படும் என நீதிமன்றம் நம்புகிறது”.
இவ்வாறு தெரிவித்து வழக்கு விசாரணையை நவம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!