Tamilnadu

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச்சட்ட ஒதுக்கீடு : டிச.,14க்குள் நிலுவைத் தொகை செலுத்த தமிழக அரசுக்கு கெடு!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டதை எதிர்த்தும், 2017-18, 2018-19, 2019-20ம் கல்வியாண்டுகளில் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக்கோரியும், 2020-21ம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கல்வி துறை சார்பில், 2018 - 2019 ம் கல்வியாண்டிற்கான அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்காக 303.70 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், 2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான நிலுவை தொகை விரைவில் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 2018-2019 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகை கிடைக்காத தனியார் பள்ளிகள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கும் பட்சத்தில், பள்ளிகளின் தகுதியைப் பொறுத்து நிலுவைத்தொகை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையைச் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, 2019-2020 ஆம் ஆண்டிற்கான நிலுவைத் தொகையை டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் செலுத்த கடைசி வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்த நீதிபதி, அவ்வாறு செலுத்தாத பட்சத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Also Read: “மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு AICTE காரணமா?” - ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி!