Tamilnadu
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் : அறிக்கை கேட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படும் நிலையில், இந்தத் தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், ஏஜென்சிகளே எடுத்துக் கொள்வதாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும், டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வகையில் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுவதாகவும், இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமையல் எரிவாயு விநியோக உரிமை ஒப்பந்தம் செய்யும்போதே, பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும்போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து இந்த முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சிகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நுகர்வோர்களின் புகார்களை மட்டும் எதிர்பார்க்காமல் கேஸ் ஏஜென்சிகளில் திடீர் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், இதுவரை நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கேஸ் ஏஜென்சிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்தும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனவரி 8 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!