Tamilnadu
“சலூன் கடையில் நூலகம்” : பிரதமரை தன்னிடம் பேசவைத்த தூத்துக்குடி இளைஞர் பொன் மாரியப்பன்!
வழக்கமான முடி திருத்தகங்களில் காணப்படும் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நட்சத்திரப் படங்கள் என்ன, எந்த நட்சத்திரப் படங்களும் இந்தக் கடையில் இல்லை. மாறாக, மர அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது. தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத்துள்ளார்.
தூத்துக்குடி மில்லர்புரத்தில் 'சுசில்குமார் பியூட்டி கேர்' என்ற பெயரில் முடி திருத்தகம் நடத்திவரும் பொன்.மாரியப்பன் வழக்கமாக முடி திருத்தும் கடைக்குச் செல்கிறவர்கள் செய்தித்தாள்களை வாசிப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால், பொன் மாரியப்பன் கடைக்குச் செல்கிறவர்கள் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படிப்பதை கண்டிப்பாகக் காண முடிகிறது. பொன் மாரியப்பன் கடைக்கு நாளிதழ்கள், வார இதழ்களும் வருகின்றன. அத்தோடு கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல் என சுமார் 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, திரைப்படப் பாடல்கள் என எந்த சப்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சப்தம் மட்டுமே இங்கே கேட்கிறது. சின்ன வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்கும் ஆர்வம் மாரியப்பனுக்கு உண்டு. 8-ஆம் வகுப்பு வரைக்கும்தான் படித்திருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த போதையில் சலூன் கடை நடத்தி வருகிறார்.முடிவெட்ட ஆள் வராத நேரத்தில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி இருக்கிறார். இப்படி, முழுமையாகப் படித்து முடித்த புத்தகங்களை அலமாரியில அடுக்கி வைக்கத் துவங்கியிருக்கிறார். அது இன்று 500க்கும் மேற்பட்ட ஒரு நூலகமாக உருவெடுத்திருக்கிறது.
இந்த சலூன் நூலகத்தை பலர் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தான், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி இவரது கடைக்கு வந்து நூலகத்தைப் பார்த்துப் பாராட்டியதுடன் கலைஞர் எழுதிய புத்தகம் உள்ளிட்ட 50 புத்தகங்களை அன்பளிப்பாகவும் வழங்கியுள்ளார். இது மேலும் அவருக்கு பெரும் ஊக்கத்தை தந்துள்ளது.
இந்த நிலையில்தான் பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் கனிமொழி எ.ம்பி சந்தித்து பாராட்டும் தெரிவித்து புத்தகங்களையும் பரிசாக வழங்கிய பொன். மாரியப்பன் என்பவரைத் தான் பிரதமர் மோடி அழைத்து 'வணக்கம். நல்லா இருக்கீங்களா என்று நலம் விசாரித்திருக்கிறார்.
மேலும் அவருடனான தமிழில் நடைபெற்ற உரையாடலில் 'உங்களுக்கு எந்த புத்தகம் மிகவும் பிடிக்கும். என்ற பிரதமரின் கேள்விக்கு, பொன் மாரியப்பன் 'திருக்குறள்.!' என பதிலளித்துள்ளார். இது போன்று பலர் பாராட்டுவது தனக்கு ஒரு ஊக்கத்தை தந்து வருவதாகவும் இதன் மூலம் சலூன் நூலகத்தை பெரிய அளவில் மாற்ற உதவியாக இருக்கும் என பொன் மாரியப்பன் தெரிவித்தார்.
தனக்கு ஏற்பட்டுள்ள புத்தக வாசிப்பு ஆர்வத்தை தான் மட்டும் பயன்படாமல் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் சலூன் கடையில் நூலகம் நடத்தி நாட்டின் பிரதமரையே தன்னிடம் பேச வைத்துள்ளார் இந்த இளைஞர் பொன் மாரியப்பன். புத்தக வாசிப்பே அருகி வரும் இந்தக் காலத்தில் பொன் மாரியப்பனின் இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியதே.. முடி குறையட்டும் அறிவு வளரட்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!