Tamilnadu
சென்னை தியாகராய நகரின் கடைவீதிகளில் திருட்டை கட்டுப்படுத்த போலிஸாரின் புதிய திட்டம்!
தீபாவளியை கூட்ட நெரிசலை முன்னிட்டு திருடர்களை கண்டுபிடிப்பதற்கு தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளுக்கு காவல்துறை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை வழங்க தியாகராய நகர் போலிஸார் முடிவு செய்துள்ளனர்.
தியாகராய நகரில் தீபாவளியை முன்னிட்டு துணி மற்றும் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது.
பண்டிகை காலம் முடியும் வரை, ரங்கநாதன் தெரு, ஒருவழிப் பாதையாகப் பயன்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சாலைப் பணிகள் சரிவர நிறைவுபெறாமலேயே தி.நகர் ரங்கநாதன் தெரு ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனினும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளையும் தி.நகர் போலிஸார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் மட்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பமான பேஸ்டேகர் செயலியை , பெரிய கடைகளில் பாதுகாப்பில் ஈடுபடுபவர்களுக்கு பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு போலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதன்மூலம் சந்தேகிக்கப்படும் நபர்களை செல்போனில் உள்ள அந்த செயலியை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தால், குற்றச்செயல் புரிபவர்களை அடையாளம் காண முடியும். மேலும் பெண்களிடம் இருந்து செயின் பறிப்புகள் நடைபெறாமல் தடுப்பதற்கு, கழுத்தில் அணியும் வகையில் நகை பாதுகாப்பு துணியை போலிஸார் வழங்குகின்றனர்.
ரங்கநாதன் தெருவில் நுழையும்போது காவல்துறையினர் நகைகளை அணிந்து செல்லும் பெண்களுக்கு இதை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதனால் தைரியமாக நகைகளை அணிந்து கடைவீதிகளுக்கு செல்ல முடிவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். 8 போலிஸார் பாடி காமிராவை அணிந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை, தினமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் எனவும், 30 ஆயுதப்படை போலிஸார் தினமும் பாதுகாப்பில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாது முக்கியமாக சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி தினத்திற்கு முன்னதாக இரண்டு நாட்கள் 500 போலிஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்துள்ளனர். மேலும் தி.நகர் மற்றும் பாண்டி பஜாரில் 100 சி.சி.டி.வி கேமராக்களை பயன்படுத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் மக்கள் அதிகம் கூடாத வகையிலும், திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலிஸார் ஏற்பாடுகள் செய்துள்ளனர். தி.நகர் பகுதிகளில் குற்றச் செயல் புரிந்து ஜாமீனில் வெளிவந்த நபர்கள், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால், அவர்களது ஜாமீனை உடனடியாக ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைத்து வருவதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2 மாதத்தில் 50 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தி.நகர் போலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக குற்றச் சம்பவங்கள் முற்றிலும் குறைந்துள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!