Tamilnadu

நீட் உள் ஒதுக்கீடு : அமைச்சர்களின் முடிவுதான் ஆளுநரின் முடிவு - சுட்டிக்காட்டிய தி.மு.க எம்.பி வில்சன்!

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள் ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “7.5 இடஒதுக்கீடு என்பது, 6 இருந்து 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை சட்டம் என்று தான் கூற வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 162ன்படி தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட்டு அதை ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அமைச்சர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அந்த முடிவை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆகவே முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு 7.5 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கவேண்டும் என்று அரசாணை அச்சிடப்பட்டு ஆளுநரிடம் கொடுத்து ஒப்புதல் வாங்கி உடனடியாக வெளியிட வேண்டும்.

அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இருக்கிறது. இதை உடனடியாக தமிழக அரசு செய்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதுவரை மக்கள் ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று நினைத்து வந்தோம். ஆனால் இப்பொழுது கவர்னர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாளை கவுன்சிலிங் தொடங்கக்கூடிய நிலையில் மேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்” என்று பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

Also Read: நீட் தேர்வு அமலுக்குப் பின் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு : அ.தி.மு.க அரசை விளாசும் உதயநிதி ஸ்டாலின்!