Tamilnadu
“வாரம் 500 ரூபாய் மட்டுமே சம்பளம்” : 20 ஆயிரம் ரூபாய்க்காக கொத்தடிமையாக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள்!
பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இருளர் சமூக மக்கள் இன்றளவும் பின் தங்கிய நிலையில் தான் உள்ளார்கள். குறிப்பாக இன்றைக்கு தொழில்நுட்ப வளர்ச்சி உலகத்தையே சுருக்கியுள்ளது. உலகில் எந்த பகுதியில் உள்ளவரையும் எளிதில் தொடர்புக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம்.
ஆனால், வாங்கிய சொற்ப பணத்திற்காக மனிதர்கள் கொத்தடிமையாக்கப்பட்டுவதை தடுக்க முடியவில்லை; கொத்தடிமையாக்கப்பட்டு துயரத்தில் உழல்கிற மனிதர்கள் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் படித்துக் கடந்துவிடுகிறோம்.
ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டும் தொடர்ந்து கொத்தடிமை முறையில் சிக்கிக்கொள்ள என்ன காரணம்; அதனைத் தடுக்க என்ன வழி என்ற விரிவான விவாதம் நமது சூழலில் இதுவரை உருவாகவில்லை.
அதுபோல விவதாம் பொதுத் தளத்தில் உருவாகும் போதுதான் அரசும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்கும் தனது செயல்பாட்டை தீவிரமாக செயல்படுத்தும். அப்படி ஒரு விவாத சூழல் நம்மிடையே உருவாகவில்லை என்றால், இப்போதும் புதிய கொத்தடிமைகள் உருவாக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே உள்ளது கோடுவள்ளி கிராமம். இந்த கிராமத்தில் இருளர் குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும், இவர்கள் மர வியாபாரியிடம் கொத்தடிமைகளாக இருந்து வருவதாகவும் வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, தாசில்தார் உமா ஆகியோர் கோடுவள்ளி கிராமத்திற்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர் சேர்ந்த, கோபி (33), சுமதி(31), சங்கர், (28), தேசம்மா(23), நந்தினி(12), யுவராஜ் (7), மற்றும் ஆனந்த்(5) ஆகிய ஏழு பேர் உள்ளிட்ட 17 பேரை மீட்டனர்.
பின்னர் அவர்களை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விடுதலை சான்று, அரிசி, பருப்பு மற்றும் ரொக்கம் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி இருளர்களின் சொந்த ஊரான ராமாபுரம் இருளர் காலனிக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கொத்தடிமைகளாக இருந்த இரண்டு இருளர் குடும்பத்தினர், ராணிப்பேட்டை மாவட்டம் பராஞ்சி பகுதியைச் சேர்ந்த மர வியாபாரி ரமேஷ் என்பவரிடம் ஒரு குடும்பத்தினருக்கு, 20 ஆயிரம் ரூபாய் என கடனாக வாங்கியபின் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, மரங்களை வெட்டும் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.
இவர்களுக்கு வாரத்திற்கு 500 ரூபாய் மட்டும் கூலியாக கொடுத்து உணவு மற்றும் உடமைகள் வழங்கி வருவதாக தெரிவித்தனர். 17 நபர்களுக்கும் கொரொனா பரிசோதனை செய்து சொந்த கிராமங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது குறித்து கனகம்மாசத்திரம் போலிஸார் வழக்கு பதிந்து தலைமறைவான ரமேஷ் மற்றும் இடை தரகர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!