Tamilnadu

மயானத்திற்கு சாலை வசதியில்லாததால் இறந்தவர்களின் சடலங்களை வயலுக்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் கீழ்க்குடி அம்மன் ஜாக்கி ஊராட்சியைச் சேர்ந்தது கீழ்க்குடி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால், அவர்களை அடக்கம் செய்வதற்காக ஊரில் இருந்து சுடுகாட்டிற்கு சுமார் 2 கி.மீ தூரம் வயல்வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

கோடைகாலத்தில் யாராவது இறந்துவிட்டால், சுடுகாட்டிற்குச் சடலங்களைக் கொண்டு சென்று தகனம் செய்வதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் அந்த 2 கி.மீ தூரம் உள்ள வயல்களில் சாகுபடி காலங்களில் கீழ்க்குடியில் இறந்தவர்களின் உடலை வயல்களுக்கு நடுவில் பயிர்களை மிதித்துக் கொண்டு தான் சுமந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.

உதாரணமாக நேற்று நடந்த ஒரு சம்பவத்தில் கீழ்க்குடியில் இறந்துபோன 15 வயதுடைய ஒரு சிறுவனின் உடலை அவரது உறவினர்கள் சுமார் ஒரு கி.மீ தூரத்திற்கு நடவு செய்துள்ள வயல்களில் பயிர்களுக்கு நடுவில் மிதித்துk கொண்டுதான் தூக்கிச் சென்றுள்ளனர்

ஊருக்கும் சுடுகாட்டிற்கும் பாதை இல்லாததால் இவ்வாறு வயல்களில் சடலத்தைத் தூக்கிச் செல்லும்போது, வயல்களில் உள்ள பயிர்கள் நாசமாவதால் அங்கு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக கீழ்க்குடியை சேர்ந்த ஒரு சமுக ஆர்வலர் கூறுகையில், மயானத்திற்கு சாலை அமைத்து தரக்கோரி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் பலமுறை கூறியும் அவர்கள் சாலை அமைத்து தர முன்வரவில்லை.

இதனால் ஊர் மக்கள் தற்போது கூட பயிர்களை சேதப்படுத்தியே சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டி நிலை உள்ளது எனக் கூறினார்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, கீழ்க்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சடலங்களை கொண்டு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த ஊர்மக்களின் வேண்டுகோள்.

Also Read: விதிமுறைகளை மீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் - ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கருகிய 5 உயிர்கள்!