Tamilnadu
உப்பு நீரை விநியோகிக்காமல் குளறுபடி செய்து, கோவை மக்களை பரிதவிக்க விடுவதா? -திமுக MLA கார்த்திக் கண்டனம்
மக்களின் வரிப்பணத்தை வீணடித்து , சரியான முறையில் தங்களது பராமரிப்புப் பணிகளை செய்யாத ஆழ்குழாய் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு, உப்பு நீர் வழங்கும் ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு பணிகள் செய்வதற்கு, கோவை மாநகராட்சியால் ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் அதிமுக கட்சியினருக்கே வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் , ஒரு வார்டில் 20 ,ஒரு வார்டில் 30 , மற்றொரு வார்டில் 40 , என்ற எண்ணிக்கையில் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. சராசரியாக ஒரு வார்டுக்கு , ஏறக்குறைய 25 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது.
இதில் ஒரு ஆழ்குழாய் கிணறு பராமரிப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ . 2324.00 வீதம் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படுகிறது. இதை கணக்கிட்டால் ஒரு வார்டுக்கு , ஒரு ஆண்டுக்கு சராசரியாக சுமார் ஏழு இலட்சம் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப்படுகிறது.
இதன்படி , கோவை மாநகராட்சி பகுதிகளில் கணக்கிட்டால், ஒரு ஆண்டுக்கு சுமார் பல கோடி ரூபாய் கோவை மாநகராட்சியால், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் , மக்களின் வரிப்பணமான , இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தும் , பல பகுதிகளில் உப்புநீர் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை.
மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. பல இடங்களில் முறையான உப்பு நீர் விநியோகம் மற்றும் உடைப்பு ஏற்படும் உப்பு நீர் குழாய்களை உடனுக்குடன் சரி செய்யாமல், ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் பெரும் குளறுபடிகளை செய்து வருவதால் , உப்பு நீர் விநியோகத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உப்புநீர் குழாய்கள் பழுதடைந்து பல நாட்கள், மாதங்கள் ஆனாலும், மேற்கண்ட ஒப்பந்ததாரர்களால் , பழுது சரி செய்யப்படுவதில்லை.
இதனால் பொதுமக்களுக்கு உப்பு நீர் விநியோகம் சரியான முறையில் கிடைக்காமல் , அன்றாடப் பயன்பாட்டிற்கு கூட உப்பு நீர் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பொது மக்களுடைய அன்றாடப் பயன்பாட்டிற்கான உப்பு நீர் விநியோகத்தில் , கோவை மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனக்குறைவாக அலட்சியப்போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
இந்த உப்பு நீர் பிரச்சினை தொடர்பாக பலமுறை மாநகராட்சி ஆணையாளர் , உதவி ஆணையாளர் , உதவி பொறியாளர் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசியும், கடிதங்கள் கொடுத்தும், பல இடங்களில் உப்பு நீர் விநியோகம் இதுவரை சீர் செய்யப்படவில்லை.
இந்த உப்பு நீர் பிரச்சினை குறித்தும், அதனால் பொதுமக்கள் படும் சிரமம் குறித்தும் எவ்வித கவலையுமின்றி , எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி .வேலுமணி இதே மாநகரத்தில் வசித்து வருகிறார். பொதுமக்களுக்கு அன்றாட பயன்பாட்டிற்கு கூட, பல இடங்களில் உப்பு நீர் கொடுக்க முடியாத அவல நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை உள்ளது.
ஆகவே ,பொதுமக்களின் நலன் கருதி கோவை மாநகராட்சி பகுதிகளில் உப்பு நீர் விநியோகம் சீரான முறையில், காலந்தாழ்த்தாமல் வழங்கவும், சரியான முறையில் தங்களது பராமரிப்புப் பணிகளை செய்யாத ஆழ்குழாய் கிணறு பராமரிக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!