Tamilnadu

திருப்பத்தூரில் விளை நிலத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் ஹெலிகாப்டர்... கூட்டம் கூடியதால் பரபரப்பு

மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளதால் கடந்த சில நாட்களாகத் தென் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாகத் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் சீனிவாசன் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு தனியார் ஹெலிகாப்டர் மூலம் சென்றுள்ளனர்.

அந்த ஹெலிகாப்டரில் பைலட்கள் 2 பேர் உட்பட 7 பேர் பயணித்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை திருப்பத்தூர் அருகே சென்ற ஹெலிகாப்டர் கடுமையான பனிமூட்டம் காரணமாக வழி தெரியாமல் பைலட் திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி பிரதான சாலை அருகே தாத்தான்குட்டை பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவசரமாகத் தரையிறக்கியுள்ளார். இதில் 2 பைலட் உட்பட 7 பேரும் பத்திரமாக தரையிறங்கினர்.

இந்நிலையில் தங்கள் ஊரில் இரங்கிய ஹெலிகாப்டரை காணச் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் திரண்டு வந்தனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டார். அப்போது வானிலை சீரடைந்ததும் கிளம்பிச் சென்று விடுவதாக சீனிவாசன் தெரிவித்தார். பின்னர் வானிலை சீரானதும் ஹெலிகாப்டரில் அவர்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.