Tamilnadu

“விசாரணை தாமதமாவதை வேடிக்கை பார்க்கிறது அரசு” - கால நீட்டிப்பு கோரும் ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாண்டுகளைக் கடந்தும், எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலை உள்ளது.

இந்நிலையில், எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் வரும் 24 ம் தேதியோடு முடிவடையவுள்ளது. எனவே ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை தாமதம் ஆவதை அரசு வழக்கறிஞர்கள் அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக, ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய காலநீட்டிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணைத்திற்கு 8வது முறையாக கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ம் தேதியோடு முடிவடையவுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையில் ஏற்படும் காலதாமதத்தால், ஆணையத்தின் காலக்கெடுவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அப்பல்லோ மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான மனு, நீதிமன்றம் விதித்த தடை ஆணையை நீக்குவதற்கான மனு போன்ற மனுக்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு அரசு உரிய அறிவுரைகளை அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கி வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணைகளில் அப்பல்லோ மருத்துவமனை, வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்கும்போது அரசு வழக்கறிஞர்கள் எவ்வித ஆட்சபனையும் தெரிவிக்காமலும், குறைந்தபட்சம் அடுத்த விசாரணைக்கான தேதியை குறிப்பிட்டு வலியுறுத்தாமல், வழக்கு விசாரணை தாமதம் ஆவதை அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு இருப்பதாகவும் கால நீட்டிப்பு கடிதத்தில் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 17 ம் தேதி வழக்கு விசாரணை பட்டியல் இருந்து நீக்கக்கூடாது என்ற மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று அரசு வழக்கறிஞர்களை அரசு வலியுறுத்தாவிட்டால், எதிர்காலத்தில் எப்போது வழக்கு பட்டியலுக்கு வரும் என்று தெரியாது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான சூழலில்,ஆணையத்தின் கால அவகாசம் வரும் 24 ம் தேதியோடு முடிவடையுள்ளது. எனவே ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

Also Read: ஜெ.மரணம்: ”ஆறுமுகசாமி ஆணைய விசாரணையால் உண்மையைக் கண்டறிய முடியாது”- அப்பல்லோ மருத்துவமனை கடும் விமர்சனம்!